தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 7559
தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை வரும் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19 ஆம தேதி காலை 6 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு,சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி தரப்பட்டுள்ளது.

புதுச்சேரி நீங்கலாக மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல்குளங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை நீடிக்கிறது. பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவை செயல்படவும் அனுமதி வழங்கப்படவில்லை.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் இறுதிச்சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால், அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments