வருமுன் காப்போம் : பிரதமர் நீட் : முதலமைச்சர் வலியுறுத்தல்

0 2927

ருமுன் காக்கும் நடவடிக்கைகள் மூலம் மூன்றாவது அலைக்கான சாத்தியங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என மாநில அரசுகளை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்குவதுடன், நீட் தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா ஆகிய 6 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். கடந்த சில நாட்களில், புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் இந்த 6 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதை மோடி அப்போது குறிப்பிட்டார்.

கொரோனாவுக்கான எதிரான அவசர நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 23 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக பங்கேற்றார். தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை, தமிழ்நாடு அரசு 6 விழுக்காட்டில் இருந்து முழுமையாகக் தவிர்த்துள்ளதுடன், தடுப்பூசி தட்டுப்பாடு நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்கக் கோரியிருந்ததாகவும், இந்த முக்கியமான பிரச்சினையில், பிரதமரின் ஆதரவை எதிர்நோக்குவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம் என்பதால், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments