ஒயிட் அண்ட் ஒயிட்டில் ஆடு மேய்க்கும் அதிமுக ex எம்.எல்.ஏ..!

0 4598

ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் சாத்தான்குளம் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர், தற்போது வெள்ளை சட்டை-வேட்டியுடன் ஆடுகளை மேய்த்து வருகின்றார். எம்-எயிட்டி பயணம்... கருப்பட்டி வருமானம் என்று பழைய தொழிலுக்கு அவர் திரும்பியது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் செல்லக்குட்டி எம்.எல்.ஏ என்று அழைக்கப்பட்ட சாத்தான்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகவர்ணம் தான் ஒயிட் அண்ட் ஒயிட் ஆடையில் தினமும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வருபவர்..!

2003 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இடைத்தேர்தலுக்காக சுவர்விளம்பரம் எழுத வெள்ளையடித்துக் கொண்டிருந்த 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த படுக்கபத்து கிராமத்தை சேர்ந்த இந்த சாதாரண தொண்டனான நீலமேகவர்ணத்தை அதிமுக வேட்பாளராக அறிவித்ததோடு, 7 நாட்கள் தொடர் பிரச்சாரம் செய்து வெற்றியும் பெறவைத்தார் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா. வெற்றி பெற்றவருக்கு குவாலிஸ் கார் ஒன்றையும் அப்போது பரிசாக வழங்கியுள்ளார்

2006 ஆம் ஆண்டு தேர்தலின் போது தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கம் செய்யப்பட்டு சாத்தான்குளம் தொகுதி ஸ்ரீவைகுண்டம் தொகுதியுடன் சேர்க்கப்பட்டு விட்டதால் அதன் பின் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்தாலும், தற்போது சொந்தமாக 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து அதனை காடுகளில் மேய்ப்பதையும், பதனீரை காய்ச்சி கருப்பட்டி மற்றும் கற்கண்டுகள் தயாரிக்கும் தொழிலையையும் செய்து வருவதாக தெரிவித்தார் நீலமேகவர்ணம்.

பக்குவமாக பனங்கற்கண்டு தயாரிக்கும் பணியில் மும்முரம் காட்டும் நீலமேகவர்ணம் வருடத்தில் 4 மாதங்கள் மட்டுமே இந்த தொழில் இருக்கும் என்பதால் மீதம் உள்ள நாட்களில் வழக்கம் போல விவசாய பணிகளை பார்க்க சென்று விடுவேன் என்று தெரிவித்தார்

எம்.எல்.ஏவாக இருந்த போது தாமிரபரணி ஆற்று நீரை தொகுதியின் கடைகோடிவரை கொண்டு செல்ல மேற்கொண்ட முயற்சிக்காக ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்றதாக கூறும் நீலமேகவர்ணம், சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போதும் எளிமையுடன் தொகுதி மக்களுடன் தொடர்பில் இருந்தால் தான் அவர்களின் பிரச்சனைகளை அறிந்து உரிய தீர்வுகாண இயலும் என்கிறார்.

பரிசாக கிடைத்த குவாலிஸ் காரை விற்றுவிட்டு பழையபடி சாமானிய தொண்டனாக தனது எம்.80 வாகனத்தில் ஊருக்குள் வலம் வருகின்றார் நீலமேகவர்ணம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments