கோபத்தில் இருந்த மனைவி..! கொரோனாவில் இறந்த கணவன்..! ஈகோவால் சிதைந்த குடும்பம்..!

0 6853

இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் கணவன் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அதுதெரியாமல் பிரசவத்திற்காக சென்ற தன்னை கணவன் வந்து பார்க்கவரவில்லையே என்ற கோபத்தில் தாய்வீட்டில் இருந்த மனைவி, உண்மை தெரிந்து கழுத்தில் தாலியுடன், கையில் பச்சிளம்குழந்தையுடன் தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை உத்தண்டியைச் சேர்ந்தவர் சியாமளா தேவி. பட்டதாரி பெண்ணான இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மென்பொறியாளர் சரவணனுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

மென்பொறியாளரான சரவணன் பெங்களூருவில் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் சில மாதங்கள் சியாமளாதேவி கணவருடன் பெங்களூருவில் வசித்துள்ளார். கர்ப்பமானதால் சென்னையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு பிரசவத்திற்காக சியாமளா வந்துள்ளார். அதன்பின்னர் கொரோனா தொற்று தீவிரமாக பரவியதால் பெங்களூருவில் இருந்து சரவணன் தனது சொந்த ஊரான கும்பகோணத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்த சூழலில் சென்னையிலிருந்த சியாமளாதேவியின் தந்தை இறந்துவிட, கணவரோ அவரது வீட்டாரோ துக்கத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்து கணவருடன் பேசாமல் இருந்த சியாமளா தேவி, பின்னர் அவரைத் தொடர்புகொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. கும்பகோணத்தில் உள்ள கணவரின் குடும்பத்தினரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என சியாமளா தேவி குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இதற்கிடையில் சியாமளா தேவிக்கு குழந்தையும் பிறந்து விட்டது. குழந்தை பிறந்த தகவலை சரவணனிடமும் அவருடைய குடும்பத்தினரிடமும் தெரிவிப்பதற்கு கூட அவர்கள் செல்போனை எடுக்கவில்லை என கூறுகின்றனர். அந்த நேரத்தில் முழு ஊரடங்கும் அமலில் இருந்ததால் கைக்குழந்தையுடன் நேரில் சென்று பார்க்க முடியாமல் தவித்துள்ளார்.

இந்த சூழலில் கும்பகோணத்தில் உள்ள சியாமளா தேவியின் உறவினர் ஒருவர் மூலம் ஒரு அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் பத்தாம் தேதியே சரவணன் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாகவும், ஆனால் 15 நாள் கழித்துதான் அவருடைய உறவினருக்கே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், சியாமளா தேவியிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சியாமளா தேவியும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக கும்பகோணம் சென்றுள்ளனர். ஆனால், கணவரின் வீட்டாரோ, அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன் இறந்த தகவலை கூட தனக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக சியாமளா தேவி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கணவர் இறந்து தகவல் கிடைக்காததாலும், இறுதிச் சடங்குகளை செய்யாமல், கழுத்தில் தாலியுடன் தனது பச்சிளம் பெண் குழந்தையுடன் நிற்கதியாய் நிற்பதாக சியாமளா தேவியின் தாயார் கண்ணீர் விட்டு அழுதார்.

கொரோனாவால் சரவணன் உயிரிழந்து விட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்த நிலையில், தனது கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள சியாமளாதேவி அவருடைய குடும்பத்தினரிடம் உரிய விசாரணை நடத்தி தனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என காவல்துறையிடம் முறையிட்டுள்ளார்.

சின்னஞ்சிறு கோபங்கள் கூட நெருங்கிய உறவுகளிடம் இருந்து வெகுதூரத்துக்கு பிரித்துச்சென்று விடும் என்பதற்கு இந்த சோக சம்பவம் உதாரணம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments