சிரிப்பில் சிலிப்பாக்கி 3 விக்கெட் வீழ்த்தி மாயமான லேடி..! கோடிகளுடன் சிக்கிய கேடி..!

0 5680
சிரிப்பில் சிலிப்பாக்கி 3 விக்கெட் வீழ்த்தி மாயமான லேடி..! கோடிகளுடன் சிக்கிய கேடி..!

3 பேரை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்த கையோடு கணவரது உறவினர்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கோடிகளை சுருட்டிக் கொண்டு ஓடிய பெண்ணை இராமநாதபுரத்தில் காவல்துறையினர் மடக்கியுள்ளார். முன்னாள் அமைச்சரின் பெயரை தவறாக பயன்படுத்தி கோடிகளை சுருட்டிய கிரிமினல் லேடியின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் பெயரை தவறாக பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக கோடிகளை சுருட்டிய குற்றச்சாட்டில், இராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சவடால் சவும்யா இவர் தான்..!

கரூரை சேர்ந்தவர் சுரேஷ்... மணிமுத்தாறில் ஆயுதப்படை காவலராக உள்ள இவர்., செளமியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் சிறுவயல் கிராமத்தில் உள்ள உறவினரான விஜய் என்பவரிடம் கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரை சொல்லி அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசைகாட்டியுள்ளார்.

எந்த அரசு வேலையானாலும் உடனடியாக வாங்கிக் கொடுக்க முடியும் என்று சவடாலாக... செளமியா சொன்ன கதையை நம்பி, விஜய்யின் உறவினர்கள் அரசு வேலைக்காக தங்கத்தையும் பணத்தையும் அள்ளிக்கொடுத்துள்ளனர். அந்தவகையில் விஜய்யிடம் 15 சவரன் நகைகள், உறவினரான சதீஷ் மூலமாக விஜய்யின் தம்பி தனுஷுக்கு ரேசன் கடையில் வேலைவாங்கி தருவதாக 75 ஆயிரம் ரூபாய், மற்றொரு தம்பி விஸ்வா, பெரியப்பா மகன் ஆகியோருக்கு போக்குவரத்து கழக டெப்போவில் வேலை பெற்று தருவதாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய், என போலீஸ்காரர் விஜய்யின் உறவினர்களிடம் ஒட்டு மொத்தமாக 60 சவரன் நகை, 30 லட்சம் ரூபாய் என 50 லட்சம் ரூபாயை அள்ளிய செளமியா அங்கிருந்து கம்பியை நீட்டியதாக கூறப்படுகின்றது.

செளமியாவின் கணவரான சுரேஷ், அவர் தன்னை பிரிந்து சென்று விட்டதாக கையை விரித்து விட்டதால், செளமியா, சதீஷ், சுரேஷ் ஆகிய மூவர் மீதும், ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் சேலத்தில் 3ஆவது கணவர் சீனிவாசன் என்பவரின் வீட்டில் வைத்து செளமியாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கிலோ கணக்கில் நகைகளை மோசடியாக பெற்ற புகாருக்குள்ளான செளமியாவின் கழுத்தில் மஞ்சள் தாலி கயிறு மட்டுமே மிச்சம் இருந்தது.

காவல்துறையினரின் விசாரணையில் செளமியா ஊர் ஊராக சுற்றி இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து, அவர்களது உறவினர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்தி என்பவரை காதலித்து 2ஆவதாக திருமணம் செய்த செளமியா அவரது உறவினர்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஆசைகாட்டி கணவர் சக்தியின் வங்கி கணக்கு மூலமாக கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். ஒரு ரூபாய் கூட தனது பெயரில் பெறாததால் பாதிக்கப்பட்டவர்கள் செளமியா மீது புகார் அளிக்க இயலாமலும் அரசு வேலைக்காக கடன் வாங்கி லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்கள், கடன்கொடுத்தவர்களுக்கு பயந்து, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும் அவமானத்தால், சக்தி தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகின்றது.

2018ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரி பகுதியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி இருந்த செளமியா, பிரகாஷ் என்பவரின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகி அவர்கள் வீட்டில் இல்லாத நேரம் பீரோவில் இருந்த 22 சவரன் தங்க நகை, மூன்றரை லட்சம் பணம் ஆகியவற்றை திருடிய வழக்கில் போத்தனூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரை சேர்ந்த மாசானவடிவு என்பவரிடம் ஜெயிலில் பழகிய செளமியா, அவரது உறவினர் முருகனிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி 11 லட்சம் ரூபாய் ரொக்கமாக பெற்று மோசடி செய்ததாகவும், பணப்பறிமாற்ற ஆதாரம் இல்லாத காரணத்தால் செளமியா மீது வழக்கு பதிவு செய்ய இயலவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த மோசடிகளின் பின்னணியில் செளமியாவின் முதல் கணவரான ஆயுதப்படை காவலர் சுரேஷ் இருப்பதாகவும், அவரது அறிவுறுத்தலின்படி அழகை ஆயுதமாக்கி, மிகவும் சாமர்த்தியமாக சிரித்து மயக்கி பணம் பரிப்பு வேலைகளை செளமியா கச்சிதமாக செய்து வந்ததாக குற்றஞ்சாட்டும் போலீசார், காவலர் சுரேஷ் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு கைது நடவடிவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

கணவன் போலீஸ்... களவாணி மனைவி... ! இந்த கேடி கூட்டணியின் மோசடிக்கு ஊறுகாயாக அமைச்சரின் பெயர்..! குறுக்குவழியில் அரசு வேலைபெற நினைத்தால் இது போன்ற குறுக்குப்புத்தி உள்ளவர்களிடம் சிக்கி பணத்தை இழக்க நேரிடும் என்பதற்கு இந்த மோசடி சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments