ரூ.45 லட்சம் கொடுத்தால் ரூ.52 லட்சம் ; ஆசை காட்டி மோசடி செய்த கும்பல்

0 3292
ரூ.45 லட்சம் கொடுத்தால் ரூ.52 லட்சம் ; ஆசை காட்டி மோசடி செய்த கும்பல்

45 லட்சம் ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால், 52 லட்சம் ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தருவதாக ஏமாற்றி தமிழக போலீஸ் வேடத்தில் தொழிலதிபரிடம் 45 லட்சம் ரூபாயை பறித்து சென்ற 9 பேர் கொண்ட கும்பலை சித்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு மோசடி கும்பலிடம் பணத்தை பறிகொடுத்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு ...

கேரளாவைச் சேர்ந்த கே.வி.அசோக் என்பவர் சென்னையில் எக்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் மூலம் அறிமுகமான நபர், 2000 ரூபாய் நோட்டுகளை அரசு தடை செய்ய இருப்பதாகவும், எனவே தங்களிடம் இருக்கும் 2 ஆயிரம் நோட்டுகளுக்கு பதில் 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் அதிக பணம் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அப்போது, 52 லட்ச ரூபாய் மதிப்பில் 2000 ரூபாய் நோட்டுகள் தங்களிடம் இருப்பதாகவும், எனவே, தாங்கள் 45 லட்ச ரூபாய் மதிப்பில் 500 ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்தால் போதும் என, மோசடி நபர் தெரிவித்துள்ளார். மேலும், தங்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் இருக்கும் வீடியோவையும் அவரது செல்போனுக்கு அனுப்பி இருந்தார். 45 லட்சம் ரூபாய் கொடுத்தால் சில நிமிடங்களில் 52 லட்சம் கிடைக்கிறதே என்று கணக்குப் போட்ட அசோக், பணத்தை மாற்ற ஒப்புக் கொண்டார்.

அதன்படி 45 லட்ச ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுகளாக பணத்தை எடுத்துக் கொண்ட அசோக், கடந்த ஒன்றாம் தேதி வேலூரில் உள்ள லாட்ஜில் தங்கியுள்ளார். பின்னர் இரவு 11 மணி அளவில் சித்தூர் - வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பணத்தை மாற்ற இருந்தார். அப்போது திடீரென தமிழக போலீஸ் போன்று சீருடை அணிந்து துப்பாக்கியுடன் பொலிரோ வாகனத்தில் வந்து இறங்கிய கும்பல், அசோக்கிடம் இருந்து 45 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு சென்றது. திட்டம் போட்டு தன்னை வரவழைத்து பணத்தை பறித்ததால் அதிர்ச்சி அடைந்த அசோக், சித்தூர் மாவட்ட தாலுகா ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சித்தூர் - வேலூர் நெடுஞ்சாலையில் புதன்கிழமை வாகன தணிக்கையின் போது பொலிரோ வாகனத்தில் இருந்த நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர். வாகனத்தை சோதனையிட்ட போது உள்ளே தமிழக போலீசாரின் சீருடை, ஷு, மற்றும் துப்பாக்கி, செல்போன்கள், காரின் சீட்டுக்கு அடியில் 32 லட்சம் ரூபாய் பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அசோக்கை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் என 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், 32 லட்சம் ரூபாய் பணம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட இருப்பதாக வரும் செய்திகளை நம்பி பணத்தை கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments