எதையும் நாடாத ஏழைத்தாயின் மகன் காமராசர்..!

0 3745
எதையும் நாடாத ஏழைத்தாயின் மகன் காமராசர்..!

நேர்மை, தியாகம், தன்னலம் இல்லா உழைப்பு என அருந்தொண்டாற்றிய அரசியல் தலைவர் காமராஜர்.

கல்வி மற்றும் சமூகத்தின் அடிப்படைத் தேவைகளுக்கான வசதிகளைச் செய்து மக்கள் உள்ளங்களில் நிலையான இடத்தை பிடித்தவர் மறைந்த தமிழக முதலமைச்சர் காமராஜர். வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்ப்பணித்துக்கொண்டவர் அவர்.

1954 தொடங்கி 1963 வரையிலான காமராசரின் 9 ஆண்டுகள் ஆட்சிகாலம் தமிழகத்தின் பொற்காலமாகப் புகழப்படுகிறது..! அவர் ஆட்சி பொறுப்பேற்ற போது 5 ஆயிரத்து 303 ஆக இருந்த ஆரம்ப பள்ளிகளின் எண்ணிக்கை, பத்தே ஆண்டுகளில் 26 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டது. நீண்ட தூரம் நடந்து சென்று படித்தால் குழந்தைகள் சோர்வடைவார்கள் என்பதால் 3 மைல் இடைவெளியில் ஒரு பள்ளி இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் 471 ஆக இருந்த உயர் நிலைப்பள்ளிகள் 1,361 ஆக உயர்த்தப்பட்டது. 28 ஆக இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட்டது.  பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தையும், சீருடைத் திட்டத்தையும் கொண்டுவந்த பெருந்தலைவர் காமராஜர்..! 

படித்த இளைஞர்களும் மற்றும் படிக்காத பாமரனும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் எண்ணற்ற தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்கி வைத்தவர் காமராசர்..!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், உதகையில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை, கிண்டியில் அறுவைச் சிகிச்சைக் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பெல் தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலைகள், மேட்டூர் காகித ஆலை, கிண்டி தொழிற்பேட்டை மற்றும் அரசு சர்க்கரை ஆலைகள் என ஏராளமான தொழிற்சாலைகளை நிறுவி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு தொழில் புரட்சியை ஏற்படுத்திய அன்றைய ஆற்றல்மிகு முதல்வர் காமராஜர்..!

கன்னியாகுமரி மலை கிராம மக்களின் தாகம் தீர்க்க மாத்தூர் தொட்டிப் பாலம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், கன்னியாகுமரி நெய்யாறு திட்டம், கோவை பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம், பவானிசாகர், மணிமுத்தாறு, அமராவதி அணை, வைகை அணை, சாத்தனூர் அணை, கிருஷ்ணகிரி அணை, ஆரணியாறு அணை மற்றும் 1,600 ஏரிகள் என இன்றளவும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் பாசனத் தேவையை காமராஜரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீர்ப் பாசன திட்டங்கள் தான் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன.

பொதுவாழ்வில் எளிமையோடு கூடிய நேர்மையாளராகத் திகழ்ந்தவர் காமராசர். முதல் அமைச்சரானபின், தனது தாயாரை பார்ப்பதற்கு சொந்த ஊருக்கு அவர் சென்ற போது, வீட்டில் புதிதாக குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்படிருப்பதை கண்டுள்ளார், இது எப்படி வந்தது ? பணம் கட்டியது யார் ? என்று தாயிடம் கேட்க, அதிகாரிகளே கொண்டு வந்து இணைப்புக் கொடுத்ததாகவும், தான் ஏதும் கேட்கவில்லை என்று காமராஜரின் தாய் கூறியுள்ளார்.

அதிகாரிகளோ அம்மா வயசானவங்க அதனால வீட்டுக்கு குடிநீர் இணைப்புக் கொடுத்தோம் என்று தெரிவிக்க, கோபம் கொண்ட காமராசர், எத்தனையோ வயதான பெண்கள் பொதுக் குழாயில் தண்ணீர் பிடித்துச் செல்லும் போது, தமது வீட்டுக்கு எப்படி, விதியைமீறி குடிநீர் இணைப்புக் கொடுக்கலாம் என்று ஆவேசப்பட்டு குடிநீர் இணைப்பை உடனடியாக துண்டிக்க செய்தவர் காமராஜர்..!

கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராஜரின் தொண்டுகளைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments