அடுத்தவர் மனைவி மீது லவ்ஸ்..! பில்லி சூனியம் வைத்து சிக்கிய இளைஞருக்கு காப்பு

0 2663
அடுத்தவர் மனைவி மீது லவ்ஸ்..! பில்லி சூனியம் வைத்து சிக்கிய இளைஞருக்கு காப்பு

யூடியூப்பை பார்த்து பசியை போக்க சமையல் செய்வோர் மத்தியில் திருமணமான பெண்ணை காதலில் சிக்கவைக்க, யூடியூப்பை பார்த்து வசியபூஜை  நடத்திய ஒரு தலை காதலனை போலீசார் கொத்தாக தூக்கினர்.

யூடியூப்பை பார்த்து ரூமில் சமையல் செய்வதை வாடிக்கையாக கொண்ட ஒர்க்கிங் சிங்கிள்கள் மத்தியில் பெண்களுடன் மிங்கில் ஆகும் ஆசையில் யூடியூப்பை பார்த்து வசிய பூஜை செய்து போலீசில் சிக்கிய முரட்டு சிங்கிள் முரளி இவர் தான்..!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவை அடுத்த குண்டல பள்ளி, ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்த முரளி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தினமும் இரவில் சில செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்வதும். எதிர்முனையில் பேசுவது பெண்களாக இருந்தால் அவர்களிடம் குரல் நன்றாக உள்ளது என்று புகழ்வதையும் வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.

அந்தவகையில் அறிமுகமான நல்கொண்டா மாவட்டம் குண்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மூன்று மாதங்களாக பேசி வந்துள்ளார். அந்தப்பெண்ணிடம் தன்னை ராம்சரண் ரேஞ்சுக்கு இருப்பேன் என்று கதை அளந்த முரளி நாம் இருவரும் நேரில் சந்திக்கலாம் என்று ஆசைவார்த்தைக் கூறியுள்ளார்.

இருவரும் நேரில் சந்தித்த நிலையில் அந்தப் பெண் திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது. அந்தப்பெண்ணுக்கு முரளியை பார்த்ததும் பெரிய ஈர்ப்பு ஏதும் ஏற்படவில்லை. இருந்தாலும் தனது வாய்சாலத்தால் அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்த நினைத்த முரளி, திருமணம் ஆனாலும் பரவாயில்லை கணவரை விட்டு விட்டு தன்னுடன் வந்துவிடுமாறு ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது.

அதனை மறுத்த அந்தப் பெண் முரளியை முச்சந்தியில் நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அந்த பெண்ணை வசியப்படுத்த அவன் திட்டமிட்டுள்ளான். வசியப்படுத்துவது எப்படி என்று பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற வலைதளங்களில் உள்ள வீடியோக்களை பார்த்துவிட்டு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று மனித எலும்புக்கூடுகள் மற்றும் வசியம் செய்ய தேவையான பூஜைப் பொருட்களை எடுத்துச் சென்று அந்தப் பெண்ணின் வீட்டின் முன்பு இரவில் சூனிய பூஜை நடத்தி உள்ளான்.

அந்தப்பெண் காலையில் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பூஜை நடத்தியது தெரியவந்தது. வசிய பூஜை பற்றிய தகவல்கள் அந்த கிராம வாசிகளுக்கு தெரியவந்ததையடுத்து சூனிய பூஜையைக் கண்டு அந்த கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் மற்றும் அந்த பெண்ணுடன் சேர்ந்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, செல்போன் நம்பர் மூலம் முரளியை கண்டுபிடித்த போலீசார், அவனை கைது செய்தனர். விசாரணையின் போது அந்தப் பெண்ணை வசியம் செய்யவே பூஜையில் ஈடுபட்டதாக முரட்டு சிங்கிள் முரளி ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவனை செய்தியாளர்கள் முன்பு அடையாளப்படுத்த காவல்துறையினர் அழைத்து வந்த போது அங்கிருந்த உயர் காவல் அதிகாரி ஒருவர் , இவன விட கொடூரமான கொரோனா தொற்றிக்கொள்ள போகின்றது அதனால் இவன, கொஞ்சம் தள்ளியே நிற்க வையுங்கள் என்று அச்சம் தெரிவித்தார்.

மிஸ்டுக்கால் மூலம் பெண்களோடு மிங்கிள் ஆகும் திட்டத்திற்கு யூடியூப் வீடியோவை கையில் எடுத்த முரளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் ஜெயிலில் அடைத்தனர். யூடியூப் மூலம் புதியவைகளை அறிந்துகொள்ள பல நல்ல வீடியோக்கள் கொட்டிக்கிடக்க கெட்டதை தேடிச்சென்று பிறரின் குடிகெடுக்க முயன்றால் தண்டனை தானாக கிடைக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments