பஞ்சாயத்தை கலைங்கடா… ஊராட்சி மன்றத்தில் தகராறு..! நடுரோட்டுக்கு வந்த ஊழல் குற்றச்சாட்டு

0 3062
பஞ்சாயத்தை கலைங்கடா… ஊராட்சி மன்றத்தில் தகராறு..! நடுரோட்டுக்கு வந்த ஊழல் குற்றச்சாட்டு

கோவை மாவட்டம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பில் பெண் கவுன்சிலர் ஒருவர் மயங்கி விழுந்தார். ஊராட்சியின் ஊழல் தலைமை என சித்தரித்து ஊருக்குள் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அகற்றிய தகராறில் ஊராட்சித் தலைவி காயமடைந்தார். 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் உறுப்பினர்கள் இரு பிரிவாக செயல்படும் நிலையில், ஒரு தரப்பு துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

நேற்று நடைபெற்ற மன்றக் கூட்டத்தில், பணிகள் தொடர்பாகவும், பணிகளுக்கான கணக்கு கேட்டும்  இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாயத்தை கலைங்கப்பா என்ற பாணியில் பெண் கவுன்சிலர்கள் ஆவேசமடைந்தனர்.

ஒரு பிரிவு கவுன்சிலர்களுக்கும் துணைத் தலைவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், பெண் கவுன்சிலர் ஒருவர் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் இருவரது புகைப்படத்தையும் வைத்து ஊழல்வாதிகள் என அச்சிட்டு பிளக்ஸ் பேனர் ஊருக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிளக்ஸ் வைரலாகப் பரவிய நிலையில், ஊராட்சித் தலைவர் விமலாவும், துணைத் தலைவர் வினோத்தும் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று பேனரை அகற்றியுள்ளனர். துணைத் தலைவர் வினோத் அரிவாளால் வெட்டி பேனரை கிழித்துள்ளார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், பிளக்ஸ் கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சித் தலைவரின் கார் சாவியை பிடுங்கி வைத்துக் கொள்ள அந்த இளைஞருக்கும் ஊராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கும் இடையே நடுரோட்டில் பஞ்சாயத்து ஏற்பட்டது. 

இதில் பெண் ஊராட்சி தலைவி விமலாவுக்கு தலைப் பகுதியிலும் துணைத் தலைவர் வினோத்துக்கு மார்பு பகுதியிலும் காயம் ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிளக்ஸை அகற்றக்கூடாது என கூறிய இளைஞரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

மூவரும் புகார்  அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ்  மருத்துவமனைக்கு நேரடியாக வந்து தாக்கப்பட்டது குறித்து விசாரித்தார்.

கடந்த ஒரு மாத காலமாக சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது அது ரத்த காயம் ஏற்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments