கேரளப் பெண் பாலியல் வன்கொடுமை - பணம் பறிக்க நாடகமா ? - தீவிரமாகும் விசாரணை

0 2869

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கேரளப் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம்,  பணம் பறிக்கும் நோக்கில் அரங்கேற்றப்பட்ட நாடகம் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 பழனி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி வழிபாட்டுக்காக வந்த கேரளத்தை சேர்ந்த 40 வயது பெண், 3 பேர் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து பழனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் அதை வாங்க காவல்துறையினர் மறுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சம்மந்தப்பட்ட பெண் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலசேரி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக டிஜிபிக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த புகாரின் அடிப்படையில், பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தன்ராஜ் என்ற நபர் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குக் கடிதம் அனுப்பும் அளவுக்குச் சென்றதால், விவகாரம் பூதாகரமானது. இதனையடுத்து குற்றம் நடந்ததாக கூறப்படும் அடிவாரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர், பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து, நடந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியா விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தேதியிலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் மற்றும் அவரது கணவர் என்று கூறப்படும் நபர் அளித்த தகவலுக்கு முரணாக உள்ளதை கண்டறிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட பெண், மற்றும் உடன் வந்த நபரை விசாரிக்க கேரளா சென்றுள்ளனர்.

இதற்கிடையே புகாரளித்த பெண்ணும் உடன் வந்த நபரும் தாய், மகன் என்ற பெயரில் அறை எடுத்துத் தங்கியதாகவும் குடிபோதையில் பணம் கேட்டு மிரட்டியதாகவும் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி, கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுக்கு அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை என்பது கேரள மருத்துவர்களின் அறிக்கை மூலம் தெரியவந்திருப்பதாகக் கூறினார். எனவே திட்டமிட்டு பணம் பறிக்கும் நோக்கில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்றும், கேரளா சென்றுள்ள தமிழக போலீசார் கொடுக்கும் விசாரணை அறிக்கையைப் பொறுத்து முழுமையான தகவல்கள் வெளியில் வரும் என்றும் கூறினார்.

சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நாளன்று ஊரடங்கு காரணமாக இருமாநில போக்குவரத்துக்கும் அனுமதி இல்லாத நிலையில், பழனி கோவிலும் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்படவில்லை. எனவே, இவர்கள் இருவரும் எப்படி கேரளாவிலிருந்து பழனிக்கு வந்தனர், ஏன் கோவில் தரிசனத்துக்காக வந்ததாகக் கூறினர் என்பன உள்ளிட்ட கேள்விகளின் அடிப்படையில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments