நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 12537
நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்றம், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நாடாளும் அளவிற்கு நடிகர்கள் வளர்ந்துள்ள தமிழ்நாட்டில், கதாநாயகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை இறக்குமதி செய்துள்ளார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும் நுழைவு வரி விதிக்க தடை கோரியும் நடிகர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், காருக்கு இறக்குமதி வரி முழுமையாக செலுத்தப்பட்ட நிலையில் நுழைவு வரி மிக அதிகமாக இருப்பதாகவும், இந்த வரியை செலுத்தாததால் வாகனத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்காமல் காரை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் தான் எந்த தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிட வில்லை என்றும், வழக்கறிஞரிடம் கேட்டபோது தான் மனுதாரர் நடிகர் என்பதைத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும் நீதிபதி குறிப்பிட்டார். வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை எனவும் தனது உத்தரவில் நீதிபதி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் செலுத்தக்கூடிய வரி தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசின் நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும், தமிழ்நாட்டில் நாடாளும் அளவிற்கு நடிகர்கள் வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். ஊழலுக்கு எதிராகவும் சமூகநீதிக்கு பாடுபடுவதாகவும் சித்தரித்துக் கொள்ளும் நடிகர்கள், சட்டத்திற்கு முரணாக வரி ஏய்ப்புச் செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் நீதிபதி கூறியுள்ளார். வரிஏய்ப்பு என்பது தேசத்துரோகம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

ரிட் மனு தாக்கல் செய்துவிட்டு, அதை 9 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது எனக் குறிப்பிட்ட நீதிபதி, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது நுழைவு வரி செலுத்தப்பட்டு விட்டதா இல்லையா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை என நீதிபதி கூறியுள்ளார். மனுதாரர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தாமல் இருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ள நீதிபதி, மனுதாரரின் திரைப்படங்களை பார்ப்பதற்காக லட்சக் கணக்கான ரசிகர்கள் கொடுத்த பணத்தில், தன்னுடைய தனிப்பட்ட பயன்பாட்டுக்காக மதிப்புமிக்க காரை வாங்கியுள்ள நடிகர், வரி செலுத்தாததன் மூலம் அந்த ரசிகர்களை மதிக்கவில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

ஏழைகள் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதில் இருந்தும், ஏழைகளின் ரத்தத்தில் இருந்துமே பணம் தங்களை வந்து சேர்கிறது, வானத்தில் இருந்து பணம் கொட்டவில்லை என்பதை தேசத்தில் மதிப்புமிக்க நபர்கள் உணரவேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான நுழைவு வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2012ஆம் ஆண்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி 20 சதவீதம் போக, 2 வாரத்திற்குள் நுழைவு வரியை மனுதாரர் கட்டத்தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பணத்தை வசூலிக்கலாம் என்றும், உரிய பொறுப்புத் தொகையோடு வசூலிக்கலாம் என்றும், பணத்தை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உரிய பொறுப்புத் தொகையையும் விதிமுறைகளின்படி வசூலிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments