ஸ்மார்ட் போனில் கன்னித்தீவான கிளப் ஹவுஸ்..! பெண்களை ஏலம்விடும் கொடுமை

0 4957
ஸ்மார்ட் போனில் கன்னித்தீவான கிளப் ஹவுஸ்..! பெண்களை ஏலம்விடும் கொடுமை

ஆன் லைன் வகுப்புக்கு பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில், க்ளப் ஹவுஸ் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து  பயன்படுத்தும் பதின்பருவ பெண்களுக்கு விலை நிர்ணயம் செய்து ஏலம் விடும் கொடுமை அரங்கேறிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நவீன யுகத்தின் கண்டுபிடிப்பான ஸ்மார்ட்போனை, பெண்களை ஏலம் விடும் கன்னித்தீவு காலத்துக்கு இழுத்துச்செல்லும் க்ளப்ஹவுஸ் விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

80 களில் பேனா நண்பர்களாய் கடிதத்தில் பழகியவர்கள்... 90 களில் இணையத்தின் வளர்ச்சியால் ஆர்குட்ட்டில் ஆரம்பித்து , யாகூ என ஜிமெயிலால் நிரம்பிய நட்பு, முகனூலிலும் , டுவிட்டரிலும் ட்ரெண்டானது. வந்தா வா... வராங்காட்டி போ... என பலதரப்பட்டோரும் எண்ட்ரியும், எக்ஸிட்டுமாக வாட்ஸ் அப்பிலும் தொடர்கிறது..!

தற்போது முகம் தெரியாமல் பழக டெலகிராம்.! கூத்தடிக்க டிக்டாக்..!கும்பலாய் சேர்ந்து குதூகலிக்க கிளப் ஹவுஸ்..! என்று காலமாற்றத்துக்கு ஏற்ப அவ்வப்போது விஸ்வரூபம் எடுக்கும் செல்போன் செயலிகள், சில பதின்பருவ மாணவ மாணவிகளின் மத்தியில் நட்பு என்ற பெயரில் பெரும் விபரீதத்தை அரங்கேற்றி வருகின்றது. டிக்டாக், பப்ஜி போன்ற சில செயலிகள் தடைசெய்யப்பட்டாலும் மாற்றுவழி கண்டுபிடித்து சிலர் அவற்றை புழக்கத்தில் வைத்துள்ளனர்.

அந்தவகையில் தற்போது ஆன் லைன் கல்விக்காக அதிக அளவு பள்ளிக்கல்லூரி மாணவ மாணவிகள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வரும் நிலையில் பிரபலமாகி வரும் க்ளப் ஹவுஸ் என்ற செயலிமூலம் தனி தனி குழுவாக நட்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஏற்கனவே தெரிந்த, மற்றும் தெரியாத இளசுகள் செய்யும் சேட்டைகளும் உரையாடல்களும் அபத்தமானதாக மட்டுமல்லாமல் பெண்களை ஏலம் விடும் அளவுக்கு ஆபத்தானதாகவும் மாறி இருக்கின்றது.

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான பழைய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கன்னித்தீவு ஒன்றில் பெண்களை ஏலம் விடுவது போன்ற காட்சி இடம்பெற்று இருக்கும். அதே பாணியில் க்ளப் ஹவுஸில் பதின்பருவ இளைஞர்களும், இளம் பெண்களும் நிறைந்துள்ள ஒரு குழுவில் பெண்களுக்கு ஒரு விலை நிர்ணயித்து ஏலம் நடத்தப்பட்ட கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் புகைப்படத்தை வைத்து ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அந்த குழுவில் உள்ள மற்ற ஆண்கள் அந்த பெண்ணை கூடுதல் தொகை குறிப்பிட்டு ஏலம் கேட்கின்றனர். இறுதியில் அந்த பெண்ணுக்கு என்ன விலை நிர்ணயிக்கப்படுகிறதோ அது தான் அந்த பெண்ணின் மதிப்பு என்று கூறி இழிவுபடுத்துகின்றனர்

இதில் பங்கேற்கும் பெண்களும் பொழுது போக்கு என்று நினைத்து, முன் அறிமுகமில்லா ஆண்களிடம் தங்களது அந்தரங்க விவரங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

சில பெண்கள் தாங்களாக முன்வந்து தங்களுக்கு என்ன ரேட் தருவார்கள் ? என்று இலக்கியமாக கேட்கச் சொல்வதை பார்த்தால், க்ளப் ஹவுஸ் ஒரு ஆன் லைன் ரெட் லைட் ஹவுஸ் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

ஏற்கனவே 3 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டிவரை பெண் போக பித்தர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர். இதில் இப்படிப்பட்ட செயலிகள் வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் மனதில் பிஞ்சிலேயே நஞ்சை விதைக்கின்றது. விளையாட்டுக்கு என்றால் கூட ஒரு பெண்ணுக்கு விலை நிர்ணயிப்பதற்கு அவர்கள் என்ன கடையில் உள்ள விற்பனை பொருளா ? என்றகேள்வி எழுகின்றது.

ஒருவரது மதிப்பு என்பது அவர்கள் செய்கின்ற நற்செயல்களை பொருத்து அமையுமே தவிர, உடல் அழகை வைத்து பெண்களை விலை பேச வைக்கும் க்ளப் ஹவுஸ் போன்ற செயலிகளின் செயல்பாடு முடக்கப்பட வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், சமூக சீரழிவுக்கு வித்திடுகின்ற இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து காவல்துறையினர் தக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments