ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு..! ரசிகர்களின் அரசியல் எண்ணத்திற்கு ரஜினி அடியோடு முற்றுப்புள்ளி

0 4714

ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அரசியலில் அற்புதம், அதிசயம் நிகழும் எனக் கூறி, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் புதுக்கட்சி தொடங்கும் நிலை வரை வந்த ரஜினிகாந்த், பின்னர் அந்த முடிவை கைவிட்டார். அரசியலுக்கு தான் வரப்போவதில்லை என அவர் பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்போவதாக ரஜினி அறிவித்தார்.

அதுதொடர்பாக பல கேள்விகள் எழுந்த நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, போயஸ்தோட்ட இல்லத்தில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் பணி என்ன?, எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேனா இல்லையா என்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாக அவர் கூறினார்.

ரஜினியை எதிர்பார்த்து போயஸ் தோட்ட இல்லத்தின் முன் திரண்டிருந்த அவரது ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். தேங்காய் உடைத்தும் பூக்களை தூவியும் உற்சாகமடைந்தனர். ரஜினி, மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க புறப்பட்டுச் சென்றபோது பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

போயஸ்தோட்டத்தில் இருந்து கோடம்பாக்கம் சென்ற ரஜினிகாந்த், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த கையோடு ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியதாகவும், மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

கால சூழலால் நினைத்தது சாத்தியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ரஜினி, வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் தனக்கில்லை என விளக்கம் அளித்துள்ளார். ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் செயல்படும் என அவர் அறிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ள ரஜினிகாந்த், தமது புதிய திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேசுவார் என்ற விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments