யூடியூப் பார்த்து வங்கிக் கொள்ளைக்கு பிளான் அகப்பட்ட அப்ரண்டீஸ்கள்..! வாட்ஸ் அப் குரூப்பால் சிக்கினர்..!

0 3221
யூடியூப் பார்த்து வங்கிக் கொள்ளைக்கு பிளான் அகப்பட்ட அப்ரண்டீஸ்கள்..! வாட்ஸ் அப் குரூப்பால் சிக்கினர்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, வாட்ஸ் அப் குரூப் தொடங்கி, வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டம் போட்ட கொள்ளைக் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் வாசிங்டன்..!
வங்கியில் 98 லட்ச ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, மாலை நேரத்தில் தன்னுடன் மது அருந்தும் அப்பகுதியைச் சேர்ந்த ஆண்டனி, குமார், வெள்ளைச்சாமி ஆகியோருடன் பணத்தை திருப்பிச் செலுத்த ஐடியா கேட்டுள்ளார்.

அந்த பணத்தை திருப்பிச் செலுத்த ஆளுக்கு ஒரு ஐடியா கொடுத்த நிலையில், இறுதியில் தனது கிளாஸ்மேட் கூட்டாளிகள் உடன் சேர்ந்து பாதுகாப்பில்லா வங்கிகளில் கொள்ளையடிப்பது என்று முடிவெடுத்துள்ளார் வாசிங்டன்.

இந்த கொள்ளைத் திட்டத்தை நிறைவேற்ற தனியாக வாட்ஸ் அப் குழு ஒன்றை தொடங்கி உள்ளனர். இந்த கொள்ளைக் கும்பலுக்கு ஜி-யாக வாசிங்டன் இருந்துள்ளார்.

கடந்த மே மாதம் முதல் எந்த வங்கியில் கொள்ளையடிப்பது என்று குறித்து வாசிங்டன் தலைமையில் ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது, கோவில்பட்டி ஸ்டேட் பங்க் ஆப் இந்தியா கிளையில் பாதுகாப்புக் கிடையாது என்றும், அங்கு கொள்ளையடிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

அதே போல விருதுநகர் மாவட்ட எல்லையில் நள்ளியில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பாதுகாப்பு குறைபாடு குறித்து தெரிந்து கொண்ட வாசிங்டன் அங்கேயும் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்த உள்ளூரைச் சேர்ந்த உளவாளி வேண்டும் என்பதால் வெள்ளைச்சாமியின் நண்பரான கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 'லோக்கல் ஜேம்ஸ்பாண்டு' வெள்ளைப்பாண்டியை தேர்ந்தெடுத்து, அவருக்கு உளவு பார்ப்பதற்காக ஒரு லட்சம் ரூபாயை அட்வான்சாக வழங்கியுள்ளனர்.

அதன் பின்னர் வங்கியில் கொள்ளை அடிப்பது எப்படி ? என்று யூடியூப்பில் உள்ள வீடியோக்களை தங்கள் வாட்ஸ் குழுவில் வாசிங்டன் பகிர்ந்துள்ளார். வங்கிக் கொள்ளை மற்றும் ஏ.டி.எம் கொள்ளை குறித்த செய்திகளையும் இந்த கும்பல் தெரிந்து கொண்டு, யூடிப்பினை பார்த்து பயிற்சி எடுத்துள்ளது.

வங்கியில் பணம் எங்கு இருக்கும் ? எப்படி வங்கிக்குள் நுழைவது ? என்பது குறித்து வாசிங்டன் இந்த கும்பலுக்கு தகவல்கள் கொடுத்துள்ளதோடு சுவரைத் துளையிட கடப்பாரைகளை வாங்கி வைத்துள்ளார்.

இந்த கும்பல் தங்கள் உளவாளியான வெள்ளைப்பாண்டிக்கு வாட்ஸ் அப் மூலமாக கொள்ளைச் சம்பவம் குறித்த கட்டளைகளைப் பிறப்பித்துள்ளது.

அவரும் அந்த குறிப்பிட்ட வங்கிக்கு அடிக்கடி சென்று வந்ததால் அங்கிருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வங்கியில் உளவு பார்ப்பதற்காக நாள் முழுக்க அங்கேயே சுற்றிச் சுற்றி வந்துள்ளார்.

இதையடுத்து வங்கியின் மேலாளர் அளித்த புகாரின் பேரில் வெள்ளைப்பாண்டியை தூக்கிச்சென்ற போலீசார், அவருக்கு கொடுத்த ராஜ உபச்சாரத்தில், வங்கிக்கு வந்து செல்வது ஏன் ? என்ற உண்மையை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.

லோக்கல் ஜேம்ஸ் பாண்டு வெள்ளைப்பாண்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளை கும்பல் தலைவன் வாசிங்டன் ஜி, ஆண்டனி,குமாரு, வெள்ளச்சாமி ஆகியோர் தொக்காக சிக்கினர்.

இவர்கள் 5 பேரின் செல்போன்களை ஆய்வு செய்த போலீசார், வங்கிக் கொள்ளைக்கு திட்டமிட்ட லோக்கல் ஜேம்ஸ் பாண்டுகளின் மொத்த வாட்ஸ் அப் சாட்டிங்குகளையும் ஸ்க்ரீன் சாட் எடுத்துக் கைப்பற்றினர்.

குடிகாரன் சகவாசம் குல நாசம் என்பார்கள், இங்கே வேலைபார்த்த வங்கியில் லட்சக்கணக்கில் கையாடல் செய்ததோடில்லாமல் வேறு வங்கியிலும் கொள்ளையடிக்க குடிகார கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டு கும்பலோடு சிக்கி உள்ளார் வாசிங்டன் ஜி..!

போலீசாரின் சிறப்பு கவனிப்பில், வங்கியில் கையாடல் செய்த 98 லட்சம் ரூபாய் பணத்தையும் தனது மனைவியின் வங்கி கணக்கு மூலம் வீட்டுக்கு எடுத்துச் சென்றதும் வெளிச்சத்திற்கு வந்தது.

இழைக்கும் ஊழியர்கள்மீது மென்மையான நடவடிக்கைகளை கையாள்வதால், அவர்கள் அதைவிட பெரிய குற்றச் செயல்களில் ஈடுபட துணிகின்றனர் என்பதற்கு இந்தச்சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments