மேகதாது விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்..! முதலமைச்சர் தலைமையில் இன்று நடக்கிறது

0 1804

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கியும், தமிழக விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, மேகதாது அணை பிரச்னையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து எடியூரப்பாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்று தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments