நடிகையை அழைத்து அழகு கலை நிகழ்ச்சி வீதியில் தவிக்கும் பெண்..! மிரட்டும் வீட்டு உரிமையாளர்

0 6226
நடிகையை அழைத்து அழகு கலை நிகழ்ச்சி வீதியில் தவிக்கும் பெண்..! மிரட்டும் வீட்டு உரிமையாளர்

ஈரோட்டில் கொரோனாவில் கணவனை பறிகொடுத்த பெண்ணிடம் வாடகை மற்றும் சீட்டுப்பணம் கேட்டு வீட்டு உரிமையாளர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ஆடியோ அதாரத்துடன் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்,இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நித்யா 16-வருடங்களாக அழகு கலை தொழில் செய்து வருவதுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாரா மேக் ஓவர் என்ற பெயரில் பெண்கள் அழகு கலை நிலையம் நடத்தி, அழகு கலை பயிற்றுநராகவும் இருந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் சினிமா நடிகை ஒருவரை ஈரோட்டிற்கு அழைத்து வந்து அழகு கலை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியுள்ளார். இதில் நித்யாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாகவே கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்கள் அழகு நிலையங்கள் பூட்டபட்டதாலும் கணவர் சுரேஷ் கொரோனாவால் கடந்த மாதம் இறந்து விட்டதாலும், கடன் தொகையை சரியாக கட்ட இயலாமல் நித்யா தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான மணி என்பவரிடம் 3-லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு போட்டுள்ளார்.

இந்த ஏலச்சீட்டில் ஒன்றரை லட்சம் ரூபாய் தள்ளி ஏலத்தை எடுத்து தனது கடனில் ஒரு பகுதியை அடைத்துள்ளார். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் சீட்டு ஏலத்திற்கு தான் எடுத்த சீட்டு தொகையை சரியாக கட்டி வந்த நித்யா, தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக சீட்டு ஏலத்திற்கு பணம் செலுத்த வில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நஷ்டத்தை சரி கட்ட தனது வீட்டின் உரிமையாளரான மணியிடம் 10-நாட்கள் தவணைக்கு மேலும் 50-ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்த 50-ஆயிரம் பணத்திற்கு 10- நாட்களில் நித்யா வட்டியாக மட்டும் 8500-ரூபாய் செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அழகு நிலையம் மூடப்பட்டதால் நித்யாவால், வீட்டுவாடகை, ஏலச்சீட்டுக்கு உண்டான பணத்தையும், தவணையாக பெற்ற கடன் தொகையையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரத்தில் வீட்டின் உரிமையாளர் மணி தகாத வார்த்தையால் கடுமையாக பேசியுள்ளார். மேலும் பெற்ற கடன் தொகையை செலுத்த முடியவில்லை என்றால் தான் அழைக்கும் இடத்திற்கு வருமாறு மிரட்டினார்.

மணியின் நடவடிக்கை காரணமாக பயந்து போன நித்யா,தனது வீட்டை பூட்டி விட்டு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் குழந்தைகளை பத்திரமாக விட்டுள்ளார். அப்போது அவரது மகனிடம் செல்போனில் பேசும் போதும் முரளி கடுமையாக மிரட்டியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் வீட்டு உரிமையாளர் மணியின் நடவடிக்கைகளுக்கு பயந்து வெள்ளிக்கிழமை இரவு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாததால் சனிக்கிழமை மீண்டும் புகார் அளித்தார்.

கடன் மற்றும் ஏலச்சீட்டு மூலமாக பணம் எடுக்கும் நபர்கள் அதனை திருப்பி கட்ட சரியான தொழில் வாய்ப்புகள் இல்லாத சூழலில் அதனை தவிர்ப்பது நலம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் என்று தங்களது அவசர தேவைக்கு  பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு, திருப்பிகேட்டால் அலைக்கழிக்கும் போது இது போன்ற வீண் வாக்குவாதங்கள் எழுவதாக  சுட்டிக்காட்டும் காவல்துறையினர், பணத்தை திருப்பி தர சக்தி இல்லாதவர்களிடம் மேலும் மேலும் கடனாக பணத்தை கொடுத்து விட்டு ஆபாசமாக பேசினால் பணம் வந்துவிடாது என்கின்றனர்.

வாங்கிய பணத்தை தராமல் இழுத்தடிக்கும் கடன்காரர்கள் குறித்து பணம் கொடுத்தவர்கள் காவல் நிலையத்தில் மோசடி புகார் அளிப்பதை விடுத்து, ஆபாசமாக பேசி மிரட்டினால் வழக்கில் சிக்க நேரிடும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments