ஆன்லைன் ரம்மியின் கோரத் தாண்டவம்.. தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்..!

0 4455

ன்லைன் ரம்மி விளையாட்டில் சொத்தின் ஒரு பகுதியையே இழந்து, மீதமுள்ள சொத்திலும் பங்கு கேட்டு, பெற்று வளர்த்த தாயாரை அடித்துத் துன்புறுத்திய தம்பியை, அவரது உடன் பிறந்த அண்ணனே வெட்டிக் கொன்ற சம்பவம் சேலம் அருகே அரங்கேறி இருக்கிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் தேவூர் மைலம்பட்டியைச் சேர்ந்தவர் தனம். கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், மூத்த மகன் சீனிவாசனுடன் வசித்து வருகிறார். மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த இவரது இளைய மகன் சுதாகர், தனியார் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றி வந்திருக்கிறார்.

மதுவுக்கு அடிமையான சுதாகர், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கும் அடிமையாகி இருக்கிறார். கையில் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் ஆன்லைன் ரம்மியில் போட்டதோடு, நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடனும் வாங்கி இருக்கிறார்.

கடன் தொகையானது நூறு, ஆயிரமாகி, ஆயிரம் லட்சங்களைத் தொட்டதாகக் கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மி எனும் அரக்கன் அதன் பிறகும் விடவில்லை சுதாகரை. இழந்த பணத்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று, மேலும் மேலும் வாங்கிய கடன்கள் ஒரு கட்டத்தில் அவரது கழுத்தை இறுக்கத் தொடங்கி இருக்கிறது.

கடனில் தவித்த சுதாகர் தனது சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு தாயாரிடம் கேட்டுள்ளார். வேறு வழியின்றி கூட்டுரிமை சொத்தில் 15 செண்ட் நிலத்தை விற்று கடனை அடைத்திருக்கிறார் தனம். அதன் பிறகும் சுதாகர் ஆன்லைன் ரம்மியை விடாமல் தொடர்ந்திருக்கிறார். இதனால் மீண்டும் கடன் அதிகரிக்கவே, சொத்தில் தனது பங்கை எழுதித் தருமாறு கேட்டு நாள்தோறும் குடித்துவிட்டு வந்து தாயார் தனத்தை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். சுதாகருக்கு இரண்டும் பெண் குழந்தைகள் என்பதால், அவர்களது எதிர்காலம் கருதி சொத்தை எழுதி வைக்க தனம் தயக்கம் காட்டி வந்திருக்கிறார். தம்பியின் அட்டகாசங்களை அண்ணன் சீனிவாசன் கண்டிக்கும்போதெல்லாம் இருவருக்கும் பெரும் சண்டை மூளும் என்கிறார் தனம்.

இந்த நிலையில்தான் சனிக்கிழமை காலை வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து தாயார் தனத்திடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடு, இல்லையென்றால் சொத்தில் எனது பங்கை எழுதிக் கொடு என்று கேட்டு சுதாகர் அடித்துத் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சீனிவாசன் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கவே தலைமறைவான சுதாகர், போலீசார் வந்து சென்றதும் ஆத்திரத்தில் அரிவாளுடன் சீனிவாசனை நோக்கி பாய்ந்து வந்ததாக கூறப்படுகின்றது. அப்போது நடந்த போராட்டத்தில் தம்பி சுதாகரை வெட்டிக் கொன்ற சீனிவாசன், காவல் நிலையம் சென்று சரணடைந்திருக்கிறார். 

சுதாகரின் ஆன்லைன் ரம்மி மோகத்தால் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளும் நிர்கதியாக நிற்க, சீனிவாசன் சிறைக்குச் சென்றதால் அவரது குடும்பமும் செய்வதறியாது தவித்துக் கிடக்கிறது. என்னதான் ஆன்லைன் ரம்மி, பப்ஜி போன்ற விளையாட்டுகளுக்கு அரசுகள் தடை போட்டாலும் இணையதளம் என்ற பெரும் சமுத்திரத்தில் அவை ஏதோ ஒரு வழியில் தங்களுக்கான பலியாடுகளை தேடி வந்துகொண்டேதான் இருக்கின்றன.

எனவே, தனிமனிதர்களாக பார்த்து தங்களது எண்ணங்களுக்கு தடைகள் போட்டால் மட்டுமே இதுபோன்ற விபரீதங்கள் அரங்கேறாமல் இருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments