பிடறியில் கால்வைத்து கடத்தல் நாடகம்..! குடிகார கிட்னாப்பர்ஸ்..! சூது கவ்வியதால் ஜெயில்..!

0 2327

சென்னை அம்பத்தூரில் பெரியப்பாவிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை பறிப்பதற்காக கடத்தல் நாடகமாடிய இரவல் மகனை கூட்டாளியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். கடத்தல் கும்பலைப் பிடிக்க பெரும்படையுடன் சென்ற போலீசாரை பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கிய குடிகார கிட்னாப்பர்ஸ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

கண்கள் எல்லாம் கலங்கி... முகமெல்லாம் வீங்கிப்போய் இருக்கும் இவர் தான், தன்னை தானே கடத்தி தனது பெரியப்பாவிடம் 10 லட்சம் ரூபாய் கேட்ட குடிகார கிட்னாப்பர் சண்முகம்..!

அம்பத்தூர், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சண்முகம் கட்டுமான நிறுவன சூப்பர்வைசராக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் விவகாரத்துப் பெற்று தனியாக வசித்து வரும் சண்முகம் வீட்டில் இருந்து மாயமான நிலையில், அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தாய் சாந்தி, தந்தை ராமசாமி, அதே வீட்டில் வசிக்கும் பெரியப்பா ராஜேஸ்வரன் ஆகியோர் சண்முகத்தை தேடத்தொடங்கினர். அப்போது சண்முகத்தின் நண்பரான ரவி என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு மாயமான சண்முகம் குறித்து விசாரித்துள்ளனர்.

அதற்கு அவர், சண்முகத்தை யாரோ கடத்திச் சென்று வண்டலூரில் உள்ள வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகவும், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் விடுவிப்பேன் என கடத்தல் கும்பல் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அதோடில்லாமல், கடத்தப்பட்ட சண்முகத்தின் கைகள் கட்டப்பட்டும், பிடரியில் கால்வைத்து அடித்து உதைப்பது போன்று இரண்டு புகைப்படங்கள் அவரது தந்தை ராமசாமியின் செல்போனுக்கு வந்தன. இதனையடுத்து சண்முகம் கடத்தப்பட்டதை உறுதி செய்து கொண்டு பெரியப்பா ராஜேஸ்வரன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த இரு படங்களையும் கண்ட காவல்துறையினர் உண்மையிலேயே கடத்தல் கும்பல் தான் பிடித்து வைத்துள்ளது என்று நம்பி அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து கடத்தல் கும்பலை சுற்றிவளைத்து பிடிக்க திட்டமிட்டனர்.

சண்முகத்தின் செல்போன் டவர் மூலமாக ஆய்வு செய்ததில் கடத்தல் கும்பல் செங்கல்பட்டு மாவட்டம், கண்டிகை, வெங்கடமங்கலம் மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள ரவியின் வீட்டில் சண்முகத்தை அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து 5 ஜீப்களில் புறப்பட்ட தனிப்படை போலீசார் அந்த இடம் குறித்த தகவல்களை திரட்டி கடத்தல் கும்பலை சுற்றிவளைக்க துல்லியமான திட்டத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு அதிரடியாக சண்முகம் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டுக்குள் காவல்துறையினர் நுழைந்தனர்.

உள்ளே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சண்முகமும், கடத்தல் கும்பல் 10 லட்சம் ரூபாய் கேட்டதாக கூறிய கூட்டாளி ரவியும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து, இருவரையும் சிறப்பாக கவனித்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சண்முகத்தின் பெரியப்பா ராஜேஸ்வரனின் மகன் விபத்தில் இறந்து போனதாகவும் அதற்குரிய இழப்பீடு தொகையாக 20 லட்சம் ரூபாய் 3 தினங்களுக்கு முன்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட சண்முகம், வேலைக்கு செல்லாமல் கூட்டாளியுடன் குடியும் கும்மாளமுமாக இருப்பதற்காக பணம் பறிக்க திட்டமிட்டுள்ளான். அதன்படி தனது கூட்டாளியுடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடி அவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை பறிப்பதற்காக இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது வெளிச்சத்திற்கு வந்தது.

10 லட்சத்திற்கு ஆசைப்பட்டு கூட்டாளியுடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடி போலீஸ் படையை அலைக்கழித்த சண்முகம், ரவி ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

வேலைக்கு செல்லாமல் குறுக்கு வழியில் பணம் பறிக்க நினைத்தால் நேர்வழியில் ஜெயிலுக்கு செல்ல வேண்டி இருக்கும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments