"பிளீச்சிங் பவுடர்" எனும் ஆபத்து.. கையாள்வதில் தேவை கவனம்..!

0 19902

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பிளீச்சிங் பவுடரை தவறுதலாக சாப்பிட்டதால் உடல்நலம் பாதித்து, உணவு உட்கொள்ளாமல் எலும்பும் தோலுமாக மாறிய 5 வயது பெண் குழந்தையைக் காப்பாற்ற பெற்றோர் போராடி வருகின்றனர்.

செங்கோட்டை அடுத்த மேலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான சீதா ராஜ் - பிரேமா தம்பதியினருடைய 5 வயது பெண் குழந்தை இசக்கியம்மாள். 3 மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இசக்கியம்மாள் அங்கிருந்த பிளீச்சிங் பவுடரை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை, சிகிச்சை முடிந்து வந்து உணவு, தண்ணீர் உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால் உடல் எடை கணிசமாகக் குறைந்து குழந்தை எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கிறாள்.

மேல் சிகிச்சைக்காக இசக்கியம்மாளை சென்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையில், பெற்றோரின் வறுமை அதற்குத் தடை போட்டு நிற்கிறது. எனவே அரசோ, தனியார் அமைப்புகளோ குழந்தையைக் காப்பாற்ற உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிளீச்சிங் பவுடரில் உள்ள குளோரின் உடலுக்குள் ஹைட்ரோகுளோரிக், ஹைப்போகுளோரஸ் அமிலங்களை உருவாக்கி, (hydrochloric acid and hypochlorous acid) செரிமானத் தடத்தை பாதிக்கும் என்றும் நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, தொண்டை வலி ஏற்பட்டு உணவை உட்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

கழிவறை, குளியலறை உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடர்கள், பினாயில் போன்றவை வீடுகள் தோறும் புழக்கத்தில் உள்ளவை. அவற்றை குழந்தைகள் அணுக முடியாத இடங்களில் பாதுகாப்பாக வைப்பதே இதுபோன்ற விபரீதங்களில் நம்மைப் பாதுகாக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments