நடுத்தர மக்களின் சிக்கல்களை சொன்ன திரை ஆளுமை - கே.பாலசந்தர்

0 3166

நடுத்தர மக்களையும் பெண்களையும் மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்களை எடுத்தவர் இயக்குனர் கே.பாலசந்தர். 92வது பிறந்தநாளான இன்று.

இரு பெரும் நட்சத்திரங்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த்தை கதாநாயகர்களாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாலசந்தர்.
எண்ணற்ற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரச் செய்தவர் அவர்.

1960 ஆம் ஆண்டில் தமிழ்த்திரையுலகில் அடியெடுத்து வைத்த பாலசந்தர், எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார். பின்னர் சிவாஜி கணேசனை வைத்து எதிரொலி படத்தை எடுத்தார்.

நவீன வாழ்க்கையின் சிக்கல்களை மையமாக வைத்து படங்களை இயக்கிய சத்யஜித்ரே, மிர்னாள்சென், ரிஷிகேஷ் முகர்ஜி, ராஜ்கபூர் போன்றவர்களின் பாணியைக் கையாண்ட பாலசந்தர், நடுத்தர மக்களின் பிரச்சினைகளையும் பெண்களின் சிக்கல்களையும் தமது திரைப்படங்களில் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டினார்.

முதுமை, முறை தவறிய உறவுகள், நிறைவேறாத காதல்கள், விவாகரத்து பெறும் பெண்கள், திருமணமாகாத முதிர்கன்னிகள், குடும்பத்திற்காக உழைக்கும் பெண்கள் என அவரது கதாபாத்திரங்கள் வீடுதோறும் உள்ள பிரச்சனைகளை அப்படியே கண்முன்னே கொண்டுவந்தன.

காதல், நகைச்சுவை போன்ற உணர்வுகளையும் மிக வித்தியாசமாகக் கையாண்டவர் பாலசந்தர்.

மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் படங்களை இயக்கிய பாலசந்தர் கமல்ஹாசனையும் ரதி அக்னிஹோத்ரியையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையும் இந்தி சினிமாவுக்கு வழங்கினார்.

திருவள்ளுவர் மீதும் பாரதி மீதும் மிகுந்த அபிமானம் கொண்ட பாலசந்தர் தமது படங்களில் அவர்களின் எழுத்துகளை தேவைப்படும் போது எல்லாம் பயன்படுத்திக் கொண்டார்.

பாலசந்தர் படங்களில் கணவரை விட்டு விலகிச் செல்லும் பெண்களும் மனைவியை விட்டு முறைதவறும் ஆண்களும் மீண்டும் தங்கள் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புவதை கிளைமேக்ஸ் காட்சிகளில் கொண்டுவந்தார்

கடிகாரம், பொம்மை, விளம்பரப் பலகை போன்ற அஃறிணைகளையும் தமது படங்களில் நடிக்க வைத்தவர் இயக்குனர் பாலசந்தர். பாலசந்தர் படைத்த படங்கள் காலங்களைக் கடந்து, இன்றும் திரையுலக ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்படுகின்றன என்றால் அது மிகையல்ல.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments