காதலியின் தோழியை பீச்சுக்கு கூட்டி போய் செய்யிர காரியமா இது ?

0 6314

ஆட்டோவில் வரும் இளம்பெண்களிடம், மனைவி தன்னை ஏமாற்றிச் சென்று விட்டதாகக் கூறி, அனுதாபத்தால்  நட்பை பெற்று, அவர்களை காதலிக்கச் சொல்லி கையை அறுத்துக் கொண்டு மிரட்டும் விபரீத காதல் சைக்கோ ஒருவன், கூட்டாளியுடன் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளான்.

சென்னை புளியந்தோப்பு கே.எம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரோசி. இவரது 19 வயது மகள் 12ஆம் வகுப்பு முடித்து விட்டு கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். சம்பவத்தன்று மாலை அந்த இளம் பெண் பணிமுடிந்து வீடுதிரும்பிய போது, தனது தோழியின் காதலனும், ஆட்டோ டிரைவருமான தினேஷ் என்பவன் அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக கூறியதை நம்பி ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார்.

ஆனால் வீட்டிற்கு செல்லாமல் சிந்தாதிரிபேட்டை, பாரிமுனை என சுற்றி இறுதியில் எண்ணூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு வைத்து தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டு வேறொருவனுடன் சென்று விட்டதாகவும், தான் அவள் நினைவாக தாடி வளர்த்து திரிவதாகவும், 'உன்னை பார்த்தால் என் மனைவி போலவே உள்ளது' என்று கூறி காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளான்.

ஏற்கனவே இதே சோகக் கதையைச் சொல்லி தனது தோழியை தினேஷ் காதல் வலையில் வீழ்த்தியது தெரிந்திருந்ததால் உஷாரான அந்த பெண், தனது தாய்க்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது கையில் கிழித்துக் கொண்டு காதலிக்குமாறு கதறத் தொடங்கியுள்ளான் தினேஷ்.

வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் எப்படி இருந்தாலும் தன்னைத் தேடி போலீஸ் வந்து விடுவார்கள் என்பதற்காக தனது கூட்டாளி இம்ரானை வரவழைத்து ஆட்டோவை ஓட்டச்சொல்லிய தினேஷ் , அந்த பெண்ணை கத்திமுனையில் கடத்திச் சென்று உள்ளான். அந்த பெண்ணுடன் ஆட்டோவில் பல இடங்களுக்கு சென்ற தினேஷ் இரவு நேரத்தில் கொடுங்கையூர் அருகே கஞ்சா போதையில் இருந்தபோது, அவனுக்கு தெரியாமல் ஆட்டோவில் இருந்து இறங்கிய அந்தப்பெண் தப்பித்து ஓடிஉள்ளார். உதவி கேட்டு ஒவ்வொரு வீடாக கதவை தட்டிய நிலையில் 70 வயது முதியவர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளார்

இதற்கிடையே தாய் ரோசி அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு காவல்துறையினர் தீவிரதேடுதல் வேட்டை நடத்தினர். செல்போன் மூலமாக தான் இருக்கும் இடத்தை அந்த பெண் தெரிவித்ததையடுத்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஆட்டோவில் கஞ்சா போதையில் இருந்த தினேஷை தட்டித்தூக்கினர். அவனுக்கு உதவியாக இருந்த இம்ரானும் சிக்கினான்.

3 வருடங்களுக்கு முன்பு தினேஷின் இம்சை தாங்காமல் அவனது மனைவி ஓடிப்போனதாகவும், அதன் பின்னர் தன்னை ஒரு காதலில் தோல்வி அடைந்தவன் போல காட்டிக் கொண்டு தன் ஆட்டோவில் வரும் இளம் பெண்களிடம் கதை அளந்து அவர்களின் நட்பை பெற்று காதலில் வீழ்த்தி வாழக்கையை சீரழிப்பது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. அந்தவகையில் தனது காதலியின் தோழியான அந்த பெண் மீதும் தினேஷின் விபரீத பார்வை விழுந்துள்ளது. கையை அறுத்துக் கொண்டு நடித்தும் அந்த பெண் காதலிக்க சம்மதிக்காததால், கடத்திச்சென்று கட்டாயத்திருமணம் செய்ய அவன் திட்டமிட்டதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

தோழியின் காதலனாக இருந்தாலும் இது போன்ற விபரீத காமுகர்களை நம்பி அவர்களது வாகனத்தில் செல்வதை பெண்கள் தவிர்ப்பது நலம் என்று காவல்துறையினர் சுட்டிக்கட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments