35 வருட ரசிகருக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி..! அமெரிக்காவில் அன்பு மழை

0 8150

அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், 32 ஆண்டுகளாக தனது தீவிர ரசிகராக உள்ள, அமெரிக்க வாழ் தொழில் அதிபரை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்த கையோடு அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்தின் பயணத்திற்கு அவசர அனுமதி வழங்கப்பட்டது குறித்து  சந்தேகத்துக்குரிய  வகையில் டுவிட்டரில் கருத்து வெளியிட்ட நடிகை கஸ்தூரி, ரஜினியின் ரசிகர்களால் விமர்சனத்துக்குள்ளானார்.  

அமெரிக்கா சென்ற ரஜினி மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் புகைப்படம் ஒன்று வெளியானாலும் அவரது ரசிகர்கள் ரஜினியின் உடல் நிலையை அறிந்து கொள்வதில் ஆர்வம்காட்டிவருகின்றனர். இந்த நிலையில் 32 ஆண்டுகளாக தனது தீவிர ரசிகராக உள்ள அமெரிக்க தொழில் அதிபரை ரஜினிகாந்த் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மாயோ என்ற மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பூரண நலத்துடன் அங்கு ஓய்வில் உள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கவாழ் தொழில் அதிபரும், 32 ஆண்டுகால தீவிர ரசிகருமான கே.கே.முருகுபாண்டியன், தனது குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து  நலம் விசாரித்ததுடன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அது தொடர்பான புகைப்படங்களையும் முருகுபாண்டியன் வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரஜினிமக்கள் மன்ற பொறுப்பாளராக இருந்தாலும் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் முருகுபாண்டியனை சந்திக்க ரஜினி அனுமதி கொடுத்ததே தனக்கு இன்ப அதிர்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார். அவருடன் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாநில தலைமை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் சென்றனர். 

மருத்துவ பரிசோதனைகள் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளதால் ரஜினி அமெரிக்காவில் இருந்து விரைவில் தமிழகம் திரும்புவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments