ஃபேஸ்புக் முதல் பியூட்டி பார்லர் வரை.. கபட நாடகத்தில் திடீர் ட்விஸ்ட்..!

0 7269

கோவை மாவட்டம் சோமனூரில் அழகுக்கலை நிபுணர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது காதலனை உதகையில் கைது செய்த போலீசார், 19 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். முகநூல் வெளிச்சத்தில் முறைதவறிய பாதை, இருவரின் வாழ்க்கையை இருளில் தள்ளிய சம்பவம் குறித்து விளக்கும் செய்தித் தொகுப்பு...

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த கங்காதேவி பியூட்டி பார்லர் நடத்தி வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது கணவர் சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்த போது, அழகு நிலையத்திற்கு வந்த மூன்று நபர்கள், தனது கை, கால்களை கட்டி வாயையும் துணியால் அடைத்து, பாலியல் பலாத்காரம் செய்து தான் அணிந்திருந்த 19 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோதே, கங்காதேவி தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொள்ளையர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதால், அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்பட்டது. இந்த நிலையில், அழகு நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு நபர் அடிக்கடி அங்கு வந்து சென்றதும், கொள்ளை நடைபெற்றதாக கூறப்படும் தினத்தன்று வந்திருந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து கங்காதேவியின் செல்போனை ஆய்வு செய்து ஊட்டியில் பதுங்கியிருந்த, மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவனை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மனைவி, பிள்ளைகளை பிரிந்து சென்னையில் வாழ்ந்து வந்த முத்துப்பாண்டிக்கு, கங்காதேவியுடன் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டதும், அவினாசியில் தனியார் தொழிற்சாலையில் வேலைவாங்கிக் கொடுத்து அங்கேயே முத்துப்பாண்டியை தங்க வைத்து கங்காதேவி தகாத உறவை வளர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து நகை, பணத்துடன் ஓடிப் போவதற்காக திட்டம் தீட்டி, நகை கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

3 பேர் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கணவரிடம் கூறினால், அதுகுறித்து வெளியில் சொல்ல மாட்டார் என நினைத்த கங்காதேவிக்கு, போலீசார் விசாரணையை தொடங்கியதும், சிக்கிக் கொள்வோம் என பயந்து, வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

கங்காதேவியிடம் இருந்து நகைகளை வாங்கிக் கொண்டு, ஊட்டியில் அவருடன் உறவு வளர்க்க காத்திருந்த முத்துப்பாண்டிக்கும் கைவிலங்கு பூட்ட போலீசார் வந்த பிறகுதான் உண்மை உரைத்துள்ளது. முகநூல் வெளிச்சத்தில் முறைதவறும் பாதை, இறுதியில் வாழ்க்கையை இருளில் தள்ளிவிடும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments