கோவை இளசுகளின் பாதையை மாற்றும் போதை ஊசி கும்பல்..! விபரீத வீடியோ வெளியானது..!

0 4921

கோவை உக்கடம் பகுதியில் மாத்திரை ஒன்றை தண்ணீரில் கலக்கி அதனை ஊசிமூலம் போதை மருந்தாக இளைஞர்கள் சிலர் உடலில் ஏற்றிக் கொள்ளும் விபரீத வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. போதையால் பாதை மாறும் இளையதலைமுறையின் வில்லங்க செயல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கோவையில் உக்கடம், பில்லுக்கட்டு பகுதியில் இருள்சூழ்ந்த நேரத்தில் சில இளைஞர்கள் ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் ஒன்று கூடி போதை ஊசி செலுத்திவருவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சமூக ஆர்வலருக்கு, அங்கு கண்ட காட்சி அவரை அதிர வைத்துள்ளது..!

அங்கிருந்த இளைஞர்கள் சிலர் மாத்திரை ஒன்றை பிளாஸ்டிக் டம்பளரில் உள்ள தண்ணீரில் கலக்கிக் கொண்டிருந்தனர்..!

அந்த தண்ணீரில் மாத்திரை கரைந்ததும், ஊசி சிரிஞ்சின் முனையில் பஞ்சை வைத்து அந்த மாத்திரை கரைசலை உறிஞ்சி, அதனை மருந்து போல கையின் நரம்பில் செலுத்தி கொண்டதாக சொல்லப்படுகிறது.

தாங்கள் செலுத்திய மருந்து உடலில் தடையின்றி செல்ல வேண்டும் என்பதற்காக ஊசிபோட்ட போதை ஆசாமியின் கையின் பக்கவாட்டு பகுதியை தட்டிக் கொண்டிருந்தான் ஒருவன்..! அங்கிருந்த ஒவ்வொரு இளைஞரின் கண்ணும் போதையில் இருப்பதை உணர்த்தியதாக, அந்த சமூக ஆர்வலர் கூறுகிறார்.

அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி போதை ஊசி போடுவதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர். தாங்கள் செய்வது தவறு., உடலுக்கும், உயிருக்கும் பெருங்கேடு என்பதை உணராமல்., போதை ஏற்ற வேண்டும் என்ற வெறியுடன் இயங்கிக் கொண்டிருந்ததாக, அந்த வீடியோ பதிவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனை வீடியோ எடுத்த அந்த நபர் இந்த இளைஞர்கள் செய்கின்ற தவறான செயலை சுட்டிக்காட்டி அவர்களுக்கு புத்தி சொன்னாலும், அவரது வார்த்தையை கேட்கும் மன நிலையில் அந்த போதை இளசுகள் இல்லையென்று கூறப்படுகின்றது. இதையடுத்து இந்த விபரீத சம்பவத்தை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த வீடியோவில் குறிப்பிட்டது போல இதில் உள்ள போதை இளைஞர்களின் பெயர்கள் உண்மையா? இவர்கள் கோவையில் எங்கு வசிக்கின்றனர்? இவர்களுக்கு போதை ஏற்றிக் கொள்ளும் மாத்திரை எங்கு கிடைக்கின்றது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

அதே நேரத்தில் ஆரம்பத்தில் புகை பழக்கத்துக்கு அடிமையாகும் சில இளைஞர்கள், அது கஞ்சா, மதுப்பழக்கம், ஹெராயின் என மாறி அதற்கு மேல் போதை வேண்டும் என்ற உச்சபச்ச நிலையில் இது போன்ற விபரீதமாக போதை ஊசி ஏற்றிக் கொள்வதாகவும், இதனால் விரைவில் மனச்சிதைவு ஏற்படும் என்றும் சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments