வீச்சரிவாளுடன் வீர வசனம்.. பிஞ்சில் பழுத்த சிறுவன்..! சீரியசாக மன்னிப்பும் கேட்டான்

0 3956

எஸ்.ஜே.சூர்யாவின் அறிமுகப்பாடல் ஒன்றை பாடி, கையில் அரிவாளுடன் மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட 12 வயது சிறுவன் போலீசாரிடம் சிக்கியதால், தவறை உணர்ந்து மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளான். பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த விபரீத சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

மேளதாளத்துடன் ஆடிப்பாடிய நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் திருமகன் படத்தின் அறிமுகப் பாடலை பாடி, கையில் வீச்சரிவாளுடன் வீடியோ வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறான் 12 வயது பள்ளிச்சிறுவன் ஒருவன்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ் அப், முக நூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த சிறுவனின் பேச்சு சாதி பிரச்சனையை தூண்டும் வகையில் இருப்பதாக வேகமாக பரவியதால், உஷாரான காவல்துறையினர் நடத்திய விசாரணையில் , பிஞ்சில் பழுத்த அந்த சிறுவன் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. பெற்றோர் முன்னிலையில் அவனிடம் விசாரித்த போது பக்கத்து ஊரை சேர்ந்த வேறு சாதி இளைஞர் தனது கூட்டாளியான 16 வயது சிறுவனை தாக்கியதால் அந்த இளைஞருக்கு மிரட்டல் விடுப்பதற்காக , தனது கூட்டாளியின் தூண்டுதலின் பேரில் வீச்சரிவாளுடன் தான் அப்படி தவறாக பேசி வீடியோ வெளியிட்டு விட்டதாக தெரிவித்தான்.

இதையடுத்து அவர்கள் செய்தது தவறு என்பதை பெற்றோரிடமும், அந்த சிறுவர்களிடமும் சுட்டிக்காட்டிய காவல்துறையினர் இது தண்டனைக்குரிய குற்றம் என்று எச்சரித்தனர்.

இதையடுத்து பிஞ்சில் பழுத்த சிறுவன், வீடியோ எடுத்த கூட்டாளி சிறுவன் ஆகிய இருவரும் தாங்கள் செய்தது தவறு என்றும் , இது போல பள்ளிச்சிறுவர்கள் தவறு செய்யக்கூடாது என்றும் பெற்றோருடன் மன்னிப்பு வீடியோ வெளியிட்டனர்.

சினிமாவில் நாயகர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கு, கதைக்கு தக்கபடி டம்மி அரிவாளை வைத்து நடித்து விட்டு போய்விடுவார்கள். அதனை சீரியசாக எடுத்துக் கொண்டு நிஜத்தில் கையில் அரிவாளை தூக்கி பிரச்சனை செய்தால், காவல்துறையினரிடம் சிக்க நேரிடும் என்பதை சிறுவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments