"தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்" - ஓபிஎஸ் அறிக்கை

0 5548

சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.,கவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிங்கவரத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகம், அதிமுக தொடர்ந்து மூன்றாம் முறையாக ஆட்சியமைக்கும் என மக்கள் எதிர்பார்த்ததாக கூறினார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக இழந்து தோல்வியைச் சந்தித்தது என்று தெரிவித்தார்.

சி.வி.சண்முகம் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட சில தவறான கொள்கை முடிவுகள்தான், தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்து விட்டதாக தெரிவித்தார்.

பாஜக உடனான கூட்டணி குறித்து சி.வி.சண்முகம் பேச்சு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நண்பர்களாக இருப்பவர்களை எப்போதும் நாங்கள் விட்டுக்கொடுப்பதில்லை என்றார். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இப்போது அவர்களை விமர்சனம் செய்ய தயாராகவும் இல்லை என்று தெரிவித்தார்.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக உடனான கூட்டணி குறித்து சி.வி.சண்முகம் பேசியது அதிமுகவின் அதிகாரப்பூர்வக் கருத்து அல்ல என்றார். அது போன்ற கருத்துக்களுக்கு கே.டி. ராகவன் போன்றவர்கள் பதில் கூறுவது ஆரோக்கியமான செயல் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் நலன் மற்றும் தமிழ்நாட்டு நலன் கருதி பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என்றும், இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments