மோடி தலைமையிலான மத்தியஅமைச்சரவை இன்று விரிவாக்கம்

0 2506

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 20 புதிய அமைச்சர்களுடன் இன்று மாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் கூட்டுறவுகளுக்கான புதிய அமைச்சக இலாகா ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையின் விரிவாக்கம் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. 20 அமைச்சர்கள் புதிதாக பதவி வகிக்க இருப்பதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சர்கள் பட்டியல் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகிய மூவருக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருப்பதால் பல தலைவர்கள் யாருடைய பதவி போகும் யாருக்குப் புதிதாகப் பதவி கிடைக்கும் என்று குழப்பத்தில் உள்ளனர்.

அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பல தலைவர்கள் டெல்லி நோக்கி பயணித்து அங்கு பிரதமரின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். புதிய அமைச்சரவையில் பெண்களுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் உத்தரப்பிரதேச பாஜக கூட்டணி கட்சிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பாஜக கூட்டணியான நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்திற்கு 16 எம்பிக்கள் உள்ள நிலையில் 4 அமைச்சர் பதவிகளைக் கோரியுள்ளது.

இருப்பினும் பிரதமர் முடிவுக்கு கட்டுப்படுவதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அனுப்பிரியா பட்டேல், உள்ளிட்டோருக்கு பதவி உறுதி என்றும் கூறப்படுகிறது. பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இலாகாக்களுக்குப் பொறுப்பு வகிப்பதால் அவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே நாட்டின் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலத்திட்டங்களின் பலன் அடித்தட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு இந்த அமைச்சகம் பாலமாக இயங்கும். இந்தியாவில் தொழில்புரிவதற்கான முட்டுக்கட்டைகளைக் களைத்து நடைமுறை விதிகளை எளிதாக்கவும் இந்த அமைச்சகம் உறுதுணையாக இருக்கும். பல்வேறுமாநிலங்களைச் சேர்ந்த கூட்டுறவு அமைப்புகளை இணைக்கும் விதமாக இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அறிவித்த பட்ஜெட் திட்டங்களை இந்த அமைச்சகம் நிறைவேற்றும் என்றும் விவசாயிகளுக்கான அதிகாரத்தை வழங்கும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments