மிரட்டிய ஆட்டோ - பைக் பந்தயம்.. விரட்டிய போலீஸ் - சிக்கிய சில்வண்டுகள்..!

0 3141

சென்னை மதுரவாயல் புறவழிச்சாலையில் பந்தயத்தில் ஈடுபட்ட 3 ஆட்டோக்களையும் 3 பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ள போலீசார், 12 பேரை கைது செய்துள்ளனர். தனியாக வாட்சப் குழு தொடங்கி, நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்தப் பந்தயத்தில் பங்கேற்ற மேலும் 15 பேரை தேடி வருகின்றனர்.

சென்னையில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ், கார் ரேஸ் என பலவகையான பந்தயங்கள் சட்டவிரோதமாக நடத்தப்படுகின்றன. குறிப்பிட்ட தொகை பரிசு, புகழ் மற்றும் கெத்துக்காகவும் இந்தப் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற பந்தயங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதுடன் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் உள்ளது.

மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் அடிக்கடி ஆட்டோ மற்றும் பைக் பந்தயங்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுவது உண்டு. கடந்த 2019 நவம்பர் மாதம் நடந்த பந்தயத்தில் ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ மெக்கானிக் பிரபாகரன் என்பவர் உயிரிழந்தார்.

அதன் பிறகு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பந்தயங்கள் நடைபெறாமல் இருந்தது. தற்போது வாகன போக்குவரத்துக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ மற்றும் பைக் பந்தயம் நடத்தப்பட்டது. இதில் 10 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பைக்குகள் பங்கேற்றன. ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள் சீறி பாயும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்தப் பந்தயம் குறித்து கேள்விப்பட்ட போலீசார், உடனடியாக அப்பகுதிக்குச் சென்றனர். போலீசார் வருவதை அறிந்து பந்தயத்தை பாதியிலேயே கைவிட்டு, சில்வண்டுகள் சிட்டாய்ப் பறந்து மறைந்துள்ளனர். அதில் சீனிவாசன் என்ற சில்வண்டு மட்டும் போலீசிடம் சிக்கியது. அவரை வைத்து, பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்த போலீசார், மேலும் 15 பேரை தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இதுவரை 3 ஆட்டோக்கள், 3 பைக்குகள், 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில், ரேஸ் நடத்துவதற்காக வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதில் ரேஸ் குறித்த தகவல்கள், பந்தயம் நடைபெறும் இடம், தூரம், பந்தயத் தொகை, வெற்றி பெறுபவருக்குக் கிடைக்கும் சன்மானம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது தெரியவந்துள்ளதாகக் கூறுகின்றனர் போலீசார்.

5 குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்த பந்தயத்தில் பங்கேற்று இருந்ததாகவும் அவர்களில் 3 குழுக்களைச் சேர்ந்தவர்களை கைது செய்துள்ளதாகவும் கூறும் போலீசார், பந்தயம் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தலைவன் போல செயல்பட்ட சந்துரு என்பவரையும் அவரது கூட்டாளிகளையும் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.

பந்தயங்கள் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ள சாலைப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் இரவு பகல் என தொடர்ந்து அந்தப் பகுதிகளில் ரோந்து செல்வதை அதிகப்படுத்தவும் உள்ளதாக போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments