ஆத்திரத்தில் டவர்ல ஏறிட்டேன் ஐயா.. கீழே இறக்கி விடுங்க..! மனைவியால் விரட்டப்பட்டவர்

0 4036

தூத்துக்குடி அருகே மனைவி வீட்டை விட்டு துரத்தியதால் ஆவேசம் அடைந்து செல்போன் டவரில் ஏறி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர், சமாதானத்துக்கு பின்னர் இறங்க இயலாமல் தவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மனைவி வீட்டை விட்டு விரட்டியதால் செல்போன் கோபுரத்தின் மேல் ஏறி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று, மனம் மாறிய பின்னர் கீழே இறங்க இயலாமல் தவித்த ‘கஜினி ‘லிங்கத்துரை இவர் தான்..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்தவர் லிங்கதுரை. இவருக்கும் அவரது மனைவி பானுமதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் சுற்றிவந்த லிங்கதுரையை அவரது மனைவி பானுமதி வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகின்றது. மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தனக்கு நீதிவேண்டி, புலம்பி வந்த அவர் சாத்தான்குளம் வாரச்சந்தை அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி கம்பியின் மீது சுருக்கு கயிற்றை கட்டி, அதனை கழுத்தில் போட்டு தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை மிரட்டல் விடுத்த லிங்கதுரையிடம் கீழே இறங்கி வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் வரமறுத்து அடம் பிடித்த நிலையில் உள்ளூர் பிரமுகர்கள் எல்லாம் அவரை கீழே இறங்கச்சொல்லி அழைத்தனர்.

தீயணைப்புத்துறையினர், உங்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நிறைவேற்றப்படும் எனக்கூறி லிங்கதுரையிடம் உறுதி அளித்ததன் பேரில் அவர் கீழே இறங்க முற்பட்டார். ஆனால் அவரது கைகால்கள் நடுங்கியது. அப்போது டவரில் நின்றுகொண்டிருந்த அவர் "சார் சார் சார் பயமா இருக்கு சார் என்னைய எப்படியாவது காப்பாத்துங்க சார்" என வடிவேலு பாணியில் சுட்டிக்குழந்தை போல அதிகாரிகளிடம் வியர்க்க விறுவிறுக்க மன்றாடினார்.

லிங்கத்துரையின் பதற்றத்தை கண்டு அந்த இடத்தை சுற்றி இருந்தவர்கள் வாய்விட்டு சிரித்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அந்த டவரின் மீது ஏறி லிங்கதுரையை பத்திரமாக கீழே இறக்கி அழைத்து வந்தனர்.

போலீசாரிடம், தனது மனைவி பானுமதி மீதும் தனது குடும்பத்தினர் மீதும் தான் அதிக பாசம் வைத்துள்ளதாகவும் கூறிய லிங்கத்துரை அதனை உறுதிப்படுத்துவது போல கஜினி பட சூர்யா போல தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரை உடல் முழுவதும் பச்சை குத்தி வைத்திருப்பதாக காவல்துறையினரிடம் சட்டையை திறந்து காட்டினார்.

லிங்கதுரைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மீண்டும் மெய்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரது மனைவியுடன் சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதாக கூறி அழைத்துச்சென்றனர்.

மனைவி குழந்தைகள் மீதான பாசத்தை காட்ட உடலில் அவர்களது பெயரை பச்சை குத்தவேண்டியதில்லை, தினமும் ஒழுங்காகாக வேலைக்கு சென்று அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தாலே குடும்பத்தில் எந்த விதபிரச்சனையும் ஏற்படாது என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments