கொரோனா தொற்றை மனிதகுலம் வெல்லும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..!

0 2020

ஒரே பூமி, ஒரே நலவாழ்வு என்கிற அணுகுமுறையால் வழிநடத்தப்படுவதால், கொரோனா பெருந்தொற்றை மனிதகுலம் உறுதியாக வெல்லும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்வது, தடுப்பூசி போட நேரம், இடம் ஒதுக்குவது, தடுப்பூசி சான்றிதழ் வழங்குவது ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் கோவின் தளத்தைப் போன்று தங்கள் நாட்டிலும் செயல்படுத்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கோவின் குளோபல் கான்கிளேவ் என்னும் பெயரில் நடைபெற்ற மாநாட்டில் காணொலியில் பேசிய பிரதமர் மோடி, நூறாண்டுகளில் இது போன்ற பெருந்தொற்றை உலகம் கண்டதில்லை எனக் குறிப்பிட்டார். எந்தவொரு ஆற்றல் மிகுந்த நாடும் இது போன்ற ஒரு சவாலைத் தனிமையில் சமாளிக்க முடியாது என்பதை அனுபவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

கொரோனாவுக்கு எதிரான நமது போரைத் தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பதாகவும், இதற்கான மென்பொருள் குறைவில்லா வளமுடையது என்றும் பெருமிதத்துடன் கூறினார். அதனால்தான் கொரோனா தொடர்பு கண்டறிதல், தடமறிதல் தொழில்நுட்பம் கிடைத்தவுடன் அதை அனைவருக்கும் பயன்படும் வகையில் ஆக்கியதாகத் தெரிவித்தார்.

தொற்றுநோயை முறியடிக்கத் தடுப்பூசி தான் மிகச்சிறந்த நம்பிக்கை என்றும், தடுப்பூசிக் கொள்கையைத் திட்டமிடும்போதே முழுவதும் மின்னணு அணுகுமுறையைப் பின்பற்றத் தொடக்கத்திலேயே இந்தியா தீர்மானித்ததாகவும் குறிப்பிட்டார்.

உலகையே ஒரு குடும்பமாகக் கருதுவது இந்தியப் பண்பாடு என்றும், இந்தத் தத்துவத்தின் அடிப்படை உண்மையைக் கொரோனா சூழலில் பலரும் அறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதனால்தான் கோவின் தளம், ஆரோக்கிய சேது செயலி ஆகியவற்றை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆக்கியுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments