மயானத்தில் உயிர் பிழைத்த குழந்தை மருத்துவமனையில் கண் மூடியது

0 5436
மயானத்தில் உயிர் பிழைத்த குழந்தை மருத்துவமனையில் கண் மூடியது

தேனியில் பிறந்தவுடன் இறந்துவிட்டதாகக் கருதி மயானத்திற்கு கொண்டு சென்றபோது உடலசைவை வெளிப்படுத்தி உயிரோடு மீண்ட குழந்தை, ஐசியூவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மருத்துவமனையின் அலட்சியத்தையும் மீறி, குழந்தை மறுபிழைப்பு பெற்றதாக மகிழ்ச்சியில் இருந்த பெற்றோரை சோகக் கடலில் ஆழ்த்திய சிசு மரணம் குறித்து விளக்கும் செய்தித் தொகுப்பு...

தேனி மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்த, பாத்திமாமேரி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்ததாகக் கூறப்படுகிறது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, அதிகாலை 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், 700 கிராம் மட்டுமே இருந்த அந்த குழந்தை சுவாசப் பிரச்சனையால் பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்து விட்டதாகவும் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை நடைமுறைகளுக்குப் பின்னர், நேற்று காலை எட்டு முப்பது மணிக்கு இறப்பு தொடர்பான ஆவணங்களுடன் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு தந்தை பிலவேந்திரராஜாவிடம் ஒப்படைத்தனர். குழந்தையை பெற்றுக் கொண்டு பிலவேந்திரராஜா மற்றும் பாத்திமாமேரி தம்பதியினர் உறவினர்களுடன் கிருத்துவமுறைப்படி குழந்தையை மயானத்தில் புதைக்க கல்லறைத் தோட்டத்திற்கு சென்றனர். அங்கு ஏற்கெனவே குழி தோண்டப்பட்டு தயார் நிலையில் இருந்ததால், புதைப்பதற்காக தூக்கியபோது குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது.

குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி அடைந்த பெற்றோர், மீண்டும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

குழந்தை இறந்ததாகக் கூறி ஒப்படைக்கப்பட்டபோது அலட்சியப் போக்கில் இருந்ததாகக் கூறப்படும் 2 மருத்துவர்கள், 4 செவிலியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு, துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடன் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments