ஆன்லைனில் வருவது அழகியல்ல - ஆபத்து எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்

0 5706
ஆன்லைனில் வருவது அழகியல்ல - ஆபத்து எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்கள் வாயிலாக பெண்கள் பெயரில் குறுந்தகவல் அனுப்பும் மோசடியாளர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாநகர போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிக்கையில், ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்கும் கௌரவமான, ஓரளவு வசதியான ஆண்களைத் தேர்ந்தெடுத்து மர்ம நபர்கள் கண்காணிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அழகான பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி, அவற்றிலிருந்து ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்துள்ள ஆண்களின் கணக்குக்கு நட்பு வேண்டுகோள் கொடுத்து குறுஞ்செய்தி அனுப்ப தொடங்குகின்றனர்.

அதில் சபலப்படும் ஆண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை வாட்சப் வீடியோ காலில் தவறான உறவுக்கு அழைக்கின்றனர். அதில் ஏமாந்து வரும் ஆண்களின் புகைப்படங்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தும் வீடியோவாகவும் பதிவு செய்து கொள்கின்றனர்.

அந்தப் பதிவுகளை சம்மந்தப்பட்ட நபர்களின் நண்பர்களின் கணக்குக்கு அனுப்பி வைத்து, அதனையும் ஸ்க்ரீன்ஷாட் அல்லது வீடியோ எடுத்து வைத்துக் கொள்வதாக சைபர் கிரைம் போலீசார் கூறுகின்றனர். அப்படி வசமாக சிக்கும் நபர்களை அடிமையாக்கி, தாங்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும் என மோசடி நபர்கள் மிரட்டுவதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.

பணம் கொடுக்கவில்லை என்றால் நண்பர்களுக்கு அந்த ஸ்க்ரீன்ஷாட்டையும் வீடியோவையும் அனுப்பி விடுவோம் என மிரட்டத் தொடங்குவர் என்று கூறும் சைபர் கிரைம் போலீசார், பாதிக்கப்படும் ஆண்கள் சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் நற்பெயரை கெடுத்துக் கொள்ள அஞ்சி வேறு வழியின்றி பணம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகின்றனர் என்று கூறுகின்றனர்.

எனவே முகம் தெரியாத பெண்கள் பெயரில் வரும் நட்பு அழைப்புகளை சபலப்பட்டு ஏற்காமல், தவிர்ப்பது, மனதிற்கும், குடும்ப கெளரவத்திற்கு நலம் என்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments