ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகம் ; மனைவியை காணவில்லை என்று ஒன்றரை ஆண்டுகளாக நாடகமாடிய நயவஞ்சகன்

0 6121
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகம்

தாய் மற்றும் போலீஸ்கார தம்பியுடன் சேர்ந்து மனைவியை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்து சடலத்தை சாக்குப்பையில் கட்டி முல்லைப் பெரியாற்றில் வீசிவிட்டு மனைவியை காணவில்லை என்று நாடகமாடிய நயவஞ்சகன், தேனியில் கைது செய்யப்பட்டுள்ளான். கொடூர கொலையை அரங்கேற்றிவிட்டு வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த யோசனையின் படி தப்பிக்க திட்டம் தீட்டி தற்போது குடும்பத்துடன் முன்னாள் ராணுவ வீரர் சிக்கிய பின்னணி குறித்த  செய்தித் தொகுப்பு...

தேனியைச் சேர்ந்த ராணுவ வீரரான ஈஸ்வரனுக்கும் அவரது மனைவி கிரிஜாபாண்டிக்கும், 2018ஆம் ஆண்டில் திருமணமான புதிதில் இருந்தே வரதட்சணை கேட்டு, துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு வரதட்சணை கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாக உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கிரிஜாபாண்டி கொடுத்த புகாரால் ஈஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ராணுவத்தில் இருந்து ஈஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். இதன் பிறகு சமரசம் பேசி, கிரிஜாபாண்டி அவரது பெற்றோருடன் பேசக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தம்பதி இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர்.

மகள் கணவனுடன் நன்றாக வாழ்ந்தால் போதும் என்கிற எண்ணத்தில் தொடர்ந்து ஓர் ஆண்டுக்கும் மேலாக மகள் கிரிஜாபாண்டியை பார்க்காமலும், பேசாமலும் அவரது பெற்றோர் இருந்து வந்தனர். இதனிடையே, மனைவி மகனுடன் ஏற்பட்ட சண்டையால் தனியே வசித்து வந்த ஈஸ்வரனின் தந்தை சிவக்குமார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மரண தறுவாயில் இருந்த சம்மந்தியைப் பார்க்க, கிரிஜா பாண்டியின் தந்தை செல்வம் சென்றபோதுதான் அவரது நெஞ்சில் இடிபோல இறங்கிய செய்தி கிடைத்துள்ளது. ஈஸ்வரன், மனைவி கிரிஜா பாண்டியை அடித்து சித்திரவதை செய்த விவரங்களை அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து மகளைப் பார்ப்பதற்காக தேனி பாரஸ்ட்ரோடு பகுதியில் அவர் கணவனுடன் வசித்து வந்த வீட்டிற்கு தந்தை செல்வம் சென்றுள்ளார். ஈஸ்வரன் குடும்பம் அங்கு இல்லாததோடு, வேறு பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காததால், வேறுவழியின்றி தேனி நகர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி செல்வம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தலைமறைவாக இருந்த ஈஸ்வரனை நேற்று முன்தினம் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வரதட்சணை கொடுமை வழக்கால் ராணுவப் பணியை இழக்க நேரிட்டதால் ஈஸ்வரன், அதைச் சொல்லிக் காட்டி கிரிஜாபாண்டியிடம் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ஏற்பட்ட சண்டையின்போது, ஈஸ்வரன் தாக்கியதில் கழிப்பறையின் சிலாப் கல்லில் மோதி தலையில் பலத்த காயமடைந்த கிரிஜாபாண்டி வீட்டிலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இந்த கொலையை மறைக்கவும், உடலை தடயம் தெரியாமல் டிஸ்போஸ் செய்வதற்கும், பழனியில் பட்டாலியன் காவலராக பணியாற்றி வந்த தம்பி சின்ன ஈஸ்வரன் மற்றும் தாய் செல்வி ஆகியோர் உதவியுடன், ஒரு சாக்குப்பையில் கிரிஜாபாண்டியின் உடலையும், மற்றொரு சாக்குப்பையில் கருங்கல்லையும் சேர்த்து கட்டியுள்ளனர். பின்னர் இருட்டும் வரை காத்திருந்து, ஈஸ்வரனும் சின்ன ஈஸ்வரனும் இருசக்கர வாகனத்தில் சடலத்தை எடுத்துச் சென்று, அரன்மணைப்புதூர் முல்லை ஆற்றில் வீசியதாக போலீசார் விசாரணையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்கு அடிக்கடி வீட்டை மாற்றி குடியிருந்த ஈஸ்வரன் குடும்பத்தினர், ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் தேனியில் பி.சி.பட்டி, பாரஸ்ட்ரோடு, கே.ஆர்.ஆர். நகர், அனுக்கிரஹா நகர், ரத்தினம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்துள்ளனர். அரன்மனைப்புதூர் முல்லைப் பெரியாற்றில் கிரிஜாபாண்டியின் சடலம் வீசப்பட்ட இடத்தில் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சம்பவம் நடந்து ஓர் ஆண்டுக்கு மேலாகி விட்டதாலும், ஆற்றில் அதிகளவு நீர்வரத்தாலும் சடலத்தின் எச்சங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

அதே சமயம் கொலையை அரங்கேற்றிவிட்டு ஈஸ்வரன், வழக்கறிஞர் ஒருவரிடம் யோசனை கேட்டதாகவும் அவர் கொடுத்த யோசனையின் படி உடலை அப்போது ஒரு இடத்தில் வீசிவிட்டு தற்போது வேறு ஒரு இடத்தை காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அது குறித்தும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கி இளம்பெண்ணை கொலை செய்து ஆதாரங்களை மறைத்ததாக 4 பிரிவுகளின் கீழ் ஈஸ்வரன், சின்ன ஈஸ்வரன், செல்வி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிபதி உத்தரவின் பேரில் ஈஸ்வரன் மற்றும் சின்ன ஈஸ்வரன் ஆகியோரை விருதுநகர் சிறையிலும், அவரது தாய் செல்வியை நிலக்கோட்டை மகளிர் சிறையிலும் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments