மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

0 3721
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

காவிரியில் மேகதாது அணை கட்டும் திட்டத்துக்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். 

கர்நாடகத்தில் மேகதாது என்னுமிடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. அணை கட்டுவதற்குத் தேவையான அனுமதி வழங்கக் கூடாது என மத்திய நீர்வள அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றிடமும் தமிழகம் வலியுறுத்தியுள்ளது. அணை கட்டுவதற்கான பொருட்களை அப்பகுதியில் குவித்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது. 

இந்நிலையில் தமிழக முதலமைச்சருக்குக் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது அணை கட்டுவதால் 400 மெகாவாட் மின்னுற்பத்தி செய்வதுடன், பெங்களூரின் குடிநீர்த் தேவைக்கு 4 புள்ளி ஏழு ஐந்து டிஎம்சி நீர் பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழக விவசாயிகளின் நலன்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகத்திடம் கருத்துக் கேட்காமல் பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குந்தா, சில்லஹல்லா நீர்மின் திட்டங்களைத் தமிழக அரசு தொடங்கியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். காவிரிப் படுகையில் மேலும் பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இரு மாநில நலன் கருதி மேகதாது திட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இரு மாநிலங்களுக்கிடையே பேச்சு நடத்தவும் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments