வேலைக்கு செல்ல மறுத்து காதல் மனைவியை கொன்ற முகநூல் போராளி…!

0 4756

ஊழலுக்கு எதிரான கட்சியில் இருப்பதாக முழங்கி மென்பொறியாளரை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்த முகநூல் போராளி ஒருவர், தன்னை வேலைக்கு போகச்சொன்னதால் ஆத்திரம் அடைந்து காதல் மனைவியை கொலை செய்து கொரோனாவால் இறந்ததாக எரித்த சம்பவம் திருப்பதியில் அரங்கேறி உள்ளது.

திருப்பதியில் மென்பொறியாளரான மனைவியை கொலை செய்து சூட்கேசில் வைத்து எடுத்துச்சென்று கொரோனாவில் உயிரிழந்ததாக கூறி தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக கணவர் ஸ்ரீகாந்த்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதன் பின்னணி குறித்து கூடுதல் எஸ்.பி. சுப்ரஜா திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். ((spl gfx in))கடப்பா மாவட்டம் கோப்பவரம் மண்டலம் பிடுசுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டி கடந்த 12 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்து செயல்பட்டுவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜெயப்பிரகாஷ் நாராயணனின் லோக்சத்தா கட்சியின் உறுப்பினராக செயல்பட்டு வந்ததோடு ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் தன்னார்வ அமைப்பை அமைத்து யூடியூப் மற்றும் முக நூல் மூலம் தொண்டு செய்வது போன்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான்.

காவல்துறை உயரதிகாரிகள், எம்எல்ஏ, எம்.பி.க்கள், அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று போட்டோ வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு கடப்பா, மைதுக்கூர், பத்வேல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிராமப்புறங்களில் நூலகம் அமைப்பதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளான்.

முகநூல் போராளியான ஸ்ரீகாந்த்தின் ஊழலுக்கு எதிரான முழக்கத்தில் கவரப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் புவனேஸ்வரி முகநூலில் பழகி காதல் வலையில் விழுந்து, 2018 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் ஸ்ரீகாந்தை திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தனது கணவன் முகனூலில் தெரிவித்தது எல்லாம் நடிப்பு என்றும் அவன் ஒரு மோசடி வெட்டி ஆபீசர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவரிடம், தனது செல்வாக்கை பயன்படுத்தி, தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கடப்பா மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை ஒப்பந்தம் எடுத்து தருவதாக கூறி கடந்த ஆண்டு 35 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளான் ஸ்ரீகாந்த். இந்த புகாரில் அவனைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். அதன் பின்னரும் எந்த வேலைக்கும் செல்லாமல் முகநூலில் ஊழலுக்கு எதிராக முழங்கி அடுத்த மோசடிக்கு திட்டம் வகுத்துக் கொண்டிருந்துள்ளான் ஸ்ரீகாந்த்.

ஒன்றரை வயது குழந்தை உள்ள நிலையில் அதன் எதிர்காலம் கருதியாவது வேலைக்கு செல்லும் படி புவனேஸ்வரி புத்தி சொன்னதால், தனது மனைவியை வரதட்சணை வாங்கிவரும்படி அடித்து துன்புறுத்தியுள்ளான். இதனால் அந்த காதல் தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி நள்ளிரவு மனைவி புவனேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்தபோது தலையணையை கொண்டு முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளான். 22ஆம் தேதி சூட்கேஸ் வாங்கி வந்து அதில் மனைவியின் சடலத்தை வைத்து வாடகைக் காரில் எடுத்துச் சென்றுள்ளான்.

புவனேஸ்வரி சடலத்தை சூட்கேசில் வைத்து அரசு மருத்துவமனை அருகே கொண்டு சென்று தீ வைத்து கொளுத்திய ஸ்ரீகாந்த், பின்னர் தனது குழந்தையை மாமியார் வீட்டிற்கு கொண்டு சென்று கொடுத்துள்ளான். அவர்களிடம் புவனேஸ்வரிக்கு கொரோனாவின் புதிய டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டு ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலன் இல்லாமல் உயிரிழந்ததாகவும் அவரது உடலை கொரோனாவால் இறந்ததால் மருத்துவமனை நிர்வாகம் வழங்க மறுத்ததால் அங்கேயே இறுதிச்சடங்கு செய்ததாக நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்தது. அவனது குடியிருப்பில் இருந்த சிசிடிவி காமிராக்கள் ஸ்ரீகாந்தின் கொடூர செயல்களை காட்டிக்கொடுத்து விட்டதாகவும், இத்தனை கொடூர செயல்களையும் ஏதும் அறியா அந்த பச்சிளம் குழந்தையை வைத்துக் கொண்டு இந்த கொடூரன் அரங்கேற்றி இருப்பதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டினர்.

அதே நேரத்தில் முகநூலில் வலம் வரும் போலி போராளிகளை நம்பி வாழ்க்கையை ஒப்படைத்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments