"கொட்டிய மழை குட்டியை கவ்வி.." காப்பாற்றிய தாய்..!

0 3986

ஈரோட்டில் வறண்டு போன கால்வாயில் தனது குட்டிகளுடன் தங்கி இருந்த நாய் ஒன்று  திடீரென பெய்த மழையால் திக்குமுக்காடி போனது. கொட்டும் மழையிலும் தனது குட்டிகளை ஒவ்வொன்றாக மீட்டு வாயில் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக விட்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாய் பாசத்தில் மனிதர்களை விட விலங்குகள் எப்போதும் விஞ்சி நிற்கும் என்பதற்கு சாட்சியாக ஈரோட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு பெரியார் நகர், சிதம்பரம் காலனிபகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள கால்வாய் ஒன்றின் மறைவான பகுதியில் தனது 6 குட்டிகளுடன் வசித்து வந்த நாய் ஒன்று பதறிபோனது..! மழை நீரில் நனைந்த தனது குட்டிகளை லாவகமாக வாயில் கவ்வி தூக்கிச்சென்ற அந்த தாய், பாதுகாப்பான இடத்தை தேடி அங்கு விட்டு வந்தது

ஒவ்வொரு குட்டியாக அங்கிருந்து தூக்கிச்சென்று பத்திரமான இடத்தில் விட்டு வந்த அந்த நாயின் தாய் பாசத்தை கண்டு குட்டிச்சிறுவன் ஒருவன் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

மழையில் நனைந்தபடி ஒவ்வொரு குட்டியாக அந்த நாய் கவ்விக் கொண்டு சென்றபோது தன்னை பின் தொடர்ந்து வந்த ஒரு குட்டி பாதியில் நின்றுவிட திரும்பி வந்து அந்த குட்டியையும் தன்னுடன் கூட்டிச்சென்றது.

ஒரு குட்டியை தூக்கிச்செல்ல கவ்விக் கொண்டிருக்கும் போதே பசியெடுத்த குட்டி ஒன்று தாயின் மடியில் பால் அருந்த அப்போதும் தனது கூட்டிகள் மேல் எரிச்சல் அடையாமல் அவற்றை கவனமாக தூக்கிச்சென்றது.

மழையில் ஓடியாடி விளையாடிய ஒரு குட்டியின் காலை வாயால் பிடித்து கவ்விச் சென்ற காட்சியை பார்க்கும் போது அடம் பிடிக்கும் குழந்தையை ஒரு தாய் வீட்டிற்கு அழைத்துச்செல்வது போன்று இருந்தது.

தான் மழையில் நனைந்தாலும் தனது குட்டிகள் நனைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த நாய் காட்டிய தாய்பாசம் அங்கிருந்தவர்களின் விழிகளை வியந்து பார்க்கவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments