சினிமா தயாரிப்பாளர் லயனை கட்டிப்போட்டு கஞ்சி காய்ச்சிய கப்புள்ஸ்..!

0 4200

சென்னை துரைப்பாக்கத்தில் கட்டபஞ்சாயத்து செய்து பணம் பறித்த சினிமா தயாரிப்பாளரை விருந்துக்கு அழைத்து வீட்டில் கட்டிபோட்ட கணவன்-மனைவியை,  கூட்டாளியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை துரைப்பாக்கம் சக்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிர்மல்குமார் என்பவர் வசித்து வந்த வீட்டில் இருந்து ஆண் ஒருவரின் அபயக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் பூட்டை உடைத்து கதவை திறந்தனர். உள்ளே சென்று காயங்களுடன் கட்டிபோடப்பட்டிருந்தவரை உடனடியாக மீட்டனர்.

விசாரணையில் பூட்டிய வீட்டுக்குள் கட்டிப்போடப்பட்டிருந்தவர் திருமங்கலம் பேருந்து நிலையம் என்ற பெயரில் சொந்தமாக சினிமா படம் தயாரித்து நடித்த லயன் எம்.எம்.குமார் என்பது தெரியவந்தது. வீடு மனை தரகர் நலச்சங்கத்திலும் பொறுப்பு வகித்து வரும் லயன் எம்.எம்.குமார், எப்போதும் ஒயிட் அண்ட் ஒயிட் ஆடையில் வலம் வந்து கட்டபஞ்சாயத்து செய்வதை வழக்கமாக்கியுள்ளார். அந்தவகையில் அவர் எடக்கு மடக்காக செய்த பஞ்சாயத்தில் அவரே சிக்கி உடம்பெல்லாம் புண்ணான பரிதாப சம்பவம் போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.

நிர்மல் குமார் அவரது மனைவி விஷ்ணுபிரியா ஆகியோர், தங்களது குடும்ப நண்பரான கிருஷ்ணன் என்பவருக்கு 12 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டி இருந்துள்ளது. நீண்ட நாட்களாக பணத்தை கொடுக்காமல் அந்த தம்பதி இழுத்தடித்து வந்ததால் கிருஷ்ணனுக்கு ஆதரவாக பேசி பணத்தை பெற்றுக் கொடுக்க சென்ற லயன், துப்பாக்கி ஒன்றை காட்டி மிரட்டி நிர்மல்குமார் வீட்டில் இருந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், ஒரு கார், ஒரு பைக், நான்கரை சவரன் தங்க நகை, வைர மோந்திரம், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்து 25,000 ரூபாய் ஆகியவற்றை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பறித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்துள்ளது.

ஆனால் பணத்தையோ, பொருளையோ கிருஷ்ணனுக்கு கொடுக்காமல் லயன் எம்.எம்.குமார் டாடா காட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் லயன் குமாரை வலை விரித்து தூக்க காத்திருந்த கிருஷ்ணன், மீண்டும் நிர்மல் குமார் தம்பதியருடன் கைகோர்த்துள்ளார். கடந்த 27ஆம் தேதி லயன் எம்.எம்.குமாரின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு இரவு விருந்து தருவதாக விஷ்ணுபிரியா அழைத்துள்ளார்.

இதையடுத்து உற்சாகமான லயன் எம்.எம்.குமார் இரவு நேரத்தில் தனியாக விருந்துக்கு சென்றுள்ளார். அப்போது லயனை வீட்டிற்குள் சுற்றிவளைத்து மடக்கிய 3 பேரும், அவரை கட்டிப்போட்டு விடிய விடிய கஞ்சிகாய்ச்சியுள்ளனர். மேலும் வலி தாங்காமல் அலறிவிடக்கூடாது என்பதற்காக லயனின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிய லயன் எம்.எம்.குமாரை வைத்தே வேறு இடத்தில் இருந்து பேசுவது போல அவரது மனைவியிடம் பேச வைத்து, ஏற்கனவே பஞ்சாயத்து செய்து பறித்துச்சென்ற 4 லட்சம் ரூபாய் பணம், கார், பைக், கிரெடிட் மற்றும் டெபிட்கார்டுகள், உள்ளிட்டவற்றை திரும்ப பெற்றுள்ளனர்.

மேலும் லயனின், கை மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியையும் அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பனத்தையும் பறித்துக் கொண்ட இளம் தம்பதியர், கூட்டாளியுடன் வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது. ஒயிட் அண்ட் ஒயிட்டில் ஜபர்தஸ்ஸாக பஞ்சாயத்து செய்து வந்த லயனை தக்க நேரத்தில் போலீசார் மீட்காமல் விட்டிருந்தால் பசி பட்டினியால் சத்தமிடகூட தெம்பில்லாத பரிதாப நிலைக்கு சென்றிருப்பார் என்று கூறப்படுகின்றது.

லயனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி சினிமாக்களில் பயன்படுத்தக்கூடிய டம்மி துப்பாக்கி என்பது தெரியவந்தது. மிரட்டல்.. பணம் பறிப்பு.. என இருதரப்பிலும் புகாரை பெற்ற காவல்துறையினர் நிர்மல்குமார், விஷ்ணுபிரியா, கிருஷ்ணன், லயன் எம்.எம்.குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தான் தயாரித்த படத்தில் நாயகனுடன் போலீசில் சிக்கி அரைகுறை ஆடையுடன் அடிவாங்கும் காமெடியானாக நடித்திருந்த லயன் எம்.எம்.குமாரை அந்த இளம் தம்பதியர் நிஜத்திலும் காமெடியானாக்கி சென்றது தான், இந்த தாக்குதல் சம்பவத்தின் ஹைலைட்..!

அதே நேரத்தில் ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல, பெண் ஆசையில் செல்பவனுக்கும் புத்தி மட்டு என்பதற்கு இந்த தாக்குதல் சம்பவமே உதாரணம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments