சினிமா ஃபைனான்சியர் கதையில் ட்விஸ்ட்..! கட்டப்பஞ்சாயத்துக்கு போன லயன்; கட்டிப்போட்டு நையப்புடைத்த மூவர்..!

0 4589

சினிமா பைனான்சியருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதாக நைசாக பேசி வரவழைத்து வீட்டில் கட்டிபோட்டுவிட்டு அவரிடமிருந்து பணம் மற்றும் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கடனை வசூலித்து தர, சினிமா துப்பாக்கி, முறுக்கிய மீசையுடன் கட்டப் பஞ்சாயத்துக்குப் போன லயன் ஒன்று, 3 பேரிடம் சிக்கி கந்தலான கதையின் எதிர்பாராத ட்விஸ்ட்டுகள் குறித்து விவரிக்கின்றது செய்தித் தொகுப்பு...

சென்னை துரைப்பாக்கம் சக்தி நகரில் நிர்மல்குமார் அவருடைய மனைவி விஷ்ணுபிரியா இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். நிர்மல் குமாருக்கும் சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் சமூகவலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஹரிகிருஷ்ணனிடம் ரூபாய் 12 லட்சம் தம்பதிகள் இருவரும் பெற்றதாக கூறப்படுகிறது. கடனாக பெற்ற பணத்தை கொடுக்காமல் கணவன் மனைவி இருவரும் ஏமாற்றி வருவதை அறிந்த ஹரிகிருஷ்ணன், கட்டப்பஞ்சாயத்து செய்தாவது பணத்தை திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்று எண்ணி, தனது நண்பரும் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சினிமா பைனான்சியருமான லயன்.எம்.எம்.குமார் என்பவரை அனுகியுள்ளார்.

இதையடுத்து, ஹரிகிருஷ்ணன் சார்பில் நிர்மல்குமார் வீட்டிற்கு சென்ற லயன் எம்.எம்.குமார், பணத்தை வசூலிக்க கெடுபிடி காட்டியுள்ளார். துப்பாக்கி எடுத்து இருவரையும் மிரட்டி அவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு பைக், நான்கரை லட்சம் ரொக்கப் பணம், கிரடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்து ரூபாய் 25,000, நான்கரை சவரன் தங்க நகை, வைர மோதிரம், ஆகியவற்றை துப்பாக்கி முனையில் எடுத்து சென்றுள்ளார்.

ஆனால் திரைக்கதைகளில் வரும் ட்விஸ்ட் போல, பணத்தை வசூலித்த பிறகு லயனின் சிந்தனை குள்ளநரி போல மாறியுள்ளது. நிர்மல் குமார் தம்பதியிடமிருந்து எடுத்து சென்ற பணம், கார், பைக், வைர மோதிரம், தங்க நகைகளை அமுக்கிவிட முடிவு செய்து, ஹரிகிருஷ்ணனுக்கு லயன் எம்.எம்.குமார் அல்வா கொடுத்துள்ளார். இப்போது கதையில் அடுத்த ட்விஸ்ட் போல, ஏற்கெனவே ஆத்திரத்தில் இருந்த நிர்மல்குமார் தம்பதியும், ஏமாற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணனும் சேர்ந்து, லயனுக்கு பாடம் புகட்ட திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த 27ம் தேதி லயனுக்கு பிறந்தநாள் என்பதை அறிந்த மூவரும், அவரிடம் பக்குவமாக பேசி, பிறந்தநாள் பார்ட்டி கொடுப்பதாகக் கூறி, நைசாக துரைப்பாக்கம் வீட்டிற்கு வரவைத்துள்ளனர்.

பூ மிதிக்கப் போனவருக்கு நெருப்புக் குண்டம் காத்திருந்ததுபோல, நிர்மல்குமார், அவரது மனைவி விஷ்ணுபிரியா, ஹரிகிருஷ்ணன் மூவரும் சேர்ந்து லயனை தந்திரமாகக் கட்டிப்போட்டு நையப்புடைத்துள்ளனர். லயன் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை, அவரிடமிருந்த ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

கட்டிபோடப்பட்ட நிலையில், லயன் வலி தாளாமல் கூச்சலிடும் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து வீட்டின் பூட்டை உடைத்து, லயன் எம்.எம்.குமாரை மீட்டுள்ளனர். அவரது புகாரின்பேரில், தனிப்படை அமைத்து, சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா பைனான்சியரான லயன் குமாரை கட்டிபோட்டுவிட்டு கத்திமுனையில் மிரட்டி அவருடைய மனைவிக்கு போன் பேசச்செய்து, முன்னர் வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட அனைத்து பொருட்களையும் பணத்தையும் திரும்பபெற்றதும் தெரியவந்துள்ளது. இந்த ட்விஸ்ட் போதாதென்று, சினிமா துப்பாக்கியை வைத்து மிரட்டி லயன் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போது 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments