சாலையோரம் விற்கப்படும் "சிம்" கார்டுகள்..! விலை கொடுத்து வாங்கப்படும் ஆபத்தா ?

0 5403
சாலையோரம் விற்கப்படும் "சிம்" கார்டுகள்..! விலை கொடுத்து வாங்கப்படும் ஆபத்தா ?

சாலையோரங்களில் விற்கப்படும் சிம்கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி சிம் கார்டுகள் தீவிரவாத செயலுக்கும், சைபர் குற்றங்களுக்கும் சப்ளை செய்யப்படுவதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு களியகாவிளை சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்ற தீவிரவாத கும்பலுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான சிம் கார்டுகள் போலி முகவரி மூலம் சப்ளை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது.

தமிழக க்யூ பிரிவு காவல் துறை கண்டுபிடித்த இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. தீவிரவாதிகள் பயன்படுத்திய சிம்கார்டுகள் சாலையோர சிம்கார்டு விற்பவர்களிடம் சிம் கார்டு வாங்கியவர்களின் பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சாலையோரங்களில் விற்கப்படும் சிம்கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி பல சிம் கார்டுகள் வாங்கப்பட்டு இது போன்ற தீவிரவாத கும்பலுக்கும், ஆன்லைன் வங்கி மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபடும் கும்பலுக்கும் சப்ளை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகிறது.

தொலை தொடர்பு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களிடம் சிம் கார்டுகளை வாங்காமல், சாலையோரங்களில் விற்கும் கும்பலிடம் வாங்கும் வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுவதாக அனைத்திந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். 

அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளரை அதிகபடுத்துவதற்காக பல சலுகைகளை அறிவித்து ஊழியர்கள் மூலம் சிம்கார்டுகளை அதிக எண்ணிக்கையில் விற்க நிர்பந்திக்கின்றன.

சில சிம்கார்டு விநியோகஸ்தர்களும் தங்களது ஊழியர்கள் மூலம் சாலையோரங்களில் சிம்கார்டுகளை விற்பனை செய்கின்றனர். இவர்களிடம் சிம்கார்டுகளை வாடிக்கையாளர் வாங்கும் போது தங்களது ஆதார் போன்ற ஆவணங்களை வழங்குவதாகவும், அந்த ஆதார் எண்களை வைத்து அவரது பெயரிலேயே ஊழியர் மற்றொரு சிம்கார்டு பெற்று அதை விற்பனை செய்வதாகவும் காவல் துறையிடம் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments