டம்மி பாபாவை கொல்ல முடியாதாம் சரீரத்தை அழிக்கலாமாம்..! சீனியர் பக்தர்கள் சொத்து சண்டை

0 2830

தன்னை கடவுள் அவதாரம் என்றும் 3 முறை செத்து பிழைத்ததாகவும் ஆன்மீக உரையில் கதை அளந்து விட்ட டம்மி பாபா சிவசங்கரின் உயிருக்கு ஆபத்து என்று அவரது பக்தர்கள் கதற ஆரம்பித்துள்ளனர். 700 கோடி ரூபாய் சொத்துக்காக அடித்துக் கொள்ளும் அறக்கட்டளை நிர்வாகிகளின் திருவிளையாடல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

பள்ளி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஜெயிலில் கம்பி எண்ணி வருபவர் டம்மி பாபா சிவசங்கரன். தற்போது போலீஸ் காவலில் சிவசங்கரனின் சேட்டைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த டம்மி பாபாவின் ஆதரவாளர்கள் இரு பிரிவாக பிரிந்து சொத்துக்காக மோதி வருகின்றனர்.

அந்தவகையில் சிவசங்கரனை பாபா என நம்பி 27 ஆண்டுகளாக பக்தராக இருக்கும் ரமேஷ் என்பவரின் தலைமையில் ஒரு குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். சிவசங்கர பாபாவின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் அவருக்கு எதிராக சதிவலை பின்னப்படுவதாகவும், அவர் அறக்கட்டளை நிர்வாகியான ஜானகி சீனிவாசனிடம் கோபித்துக் கொண்டு தான் யாத்திரை சென்றதாகவும், அங்கு வைத்து தான் மொட்டை போட்டாரே தவிர, மருத்துவமனையில் வைத்து மொட்டை போடவில்லை என்றும், அவரது வழக்கிற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக வழக்கறிஞரை மாற்ற வேண்டும் என்றும், அறக்கட்டளையை ஒரு குறிப்பிட்ட கட்சிக்குள் கொண்டு செல்ல வேலை நடப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்..

பாபாவின் அறக்கட்டளை சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் அவரை கொலை செய்ய முயற்சி நடப்பதாக தெரிவித்த சீனியர் பக்தரிடம், ஏற்கனவே 3 முறை செத்து பிழைத்தவர் என அவரே கூறியிருக்கிறாரே அப்படி இருக்க அவரை எப்படி கொலை செய்ய முடியும் ? என்று செய்தியாளர்கள் எதிர்கேள்வி எழுப்பினர். அதற்கு சாமியை கொல்ல முடியாது. ஆனால் அவருடைய சரீரத்திற்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற அச்சம் உள்ளது., ஏனென்றால் உடல் அளவில் அவரும் மனிதர் தானே என்று சமாளித்தனர்.. அதற்கு அவர் தான் கடவுள் ஆயிற்றே பின்னர் எப்படி அவரை கொலை செய்ய முடியும் என்று கேட்டதும் திரு திருவென விழித்தனர்...

செய்தியாளர்களை பார்த்து நிச்சயம் ஒரு நாள் பாபவின் ஆசிரமத்திற்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த சீனியர் பக்தர்கள், நல்ல எண்ணத்தோடு அங்கு காலடி எடுத்து வைத்தால் அத்தனை பிரச்சனைகளும் தூள் தூளாகி விடும். பாபா அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்று அழைப்பு விடுக்க, பதிலுக்கு, அங்கு வருபவர்களுக்கு பிரச்சனை தீர்ந்துவிடும் என்றால் பாபா ஏன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டார் என எதிர் கேள்வி எழுப்பியதும் , பதில் சொல்ல இயலாமல் தவித்தனர்...

தனக்கு சைக்கிள் கூட இல்லை என்று செண்டிமெண்டாக கூறி வந்த பாபாவின் 700 கோடி ரூபாய் சொத்துக்காக இரு கோஷ்டிகளாக் பிரிந்து வார்த்தை யுத்தம் நடத்திவரும் அவரது சீனியர் பக்தர்கள் டம்மி பாபா செய்த பாலியல் அத்துமீறல் குறித்த புகாருக்கு எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் அவரை நல்லவர் என்று மட்டும் சொல்லி சமாளித்து வருகின்றனர்.

இதற்கிடையே டம்மி பாபா சிவசங்கரன், தனது ஆசிரமத்தின் சொகுசு அறையில் சில பெண்களுடன் கூட்டு பாலியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ புகைப்பட மற்றும் இணைய ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கி இருப்பதால், சிவசங்கரனுக்கு எதிரான பிடி இறுகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments