நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலையை எடுக்க முடியாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 3858

நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைப்பதற்கு முன் உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்தும், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பா.ஜ.க பிரமுகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்சநீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையை புறந்தள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர்.

மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments