எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளை..! நடித்துக் காட்டிய கொள்ளையன்... ஆதாரங்களை பதிவு செய்த போலீஸார்

0 3731
எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளை..! நடித்துக் காட்டிய கொள்ளையன்... ஆதாரங்களை பதிவு செய்த போலீஸார்

எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட் மிஷின்களை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட கொள்ளை சம்பவத்தில் பிடிபட்ட கொள்ளையன் அமீர் அர்ஸை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீசார், அவனை பெரியமேடு எஸ்.பி.ஐ. ஏ.டி.எமிற்கு அழைத்துச் சென்று கொள்ளையடித்தது எப்படி என நடித்து காண்பிக்கச் சொல்லி ஆதாரங்களை சேகரித்தனர்.

தமிழகத்தில் எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட் மிஷின்களை மட்டும் குறி வைத்து நடந்த நூதனக் கொள்ளை சம்பவத்தில் ஹரியானா மாநிலத்தின் மோவாட் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பெரியமேடு ஏ.டி.எம். மையத்தில் மட்டும் தொடர்ந்து 3 நாட்களாக 190 முறை போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி 18 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதலில் கைது செய்யப்பட்ட அமீர் அர்ஸை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீசார், பெரியமேடு ஏ.டி.எம்-க்கு அழைத்து வந்து, எப்படி பணம் திருடப்பட்டது என நடித்துக் காட்டச் செய்து வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

முன்னதாக, கொள்ளை நடந்த உடனேயே ஜப்பான் நாட்டு நிறுவனமான ஓ.கே.ஐ. தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வந்த குறிப்பிட்ட டெபாசிட் மிஷின்களில் பணம் எடுக்கும் வசதியை எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் தடை செய்தது.

இதனால், கொள்ளையன் நடித்துக் காட்டிய போது பணம் வரவில்லை. இதனையடுத்து,மும்பையிலுள்ள எஸ்.பி.ஐ. வங்கி தலைமையகத்தை தொடர்பு கொண்டு பெரியமேடு ஏ.டி.எம். மையத்தில் மட்டும் பணம் எடுக்கும் வசதியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வைத்தனர்.

இதனையடுத்து, கொள்ளையனை மீண்டும் அங்கு அழைத்துச் சென்று கொள்ளைக்கு பின்பற்றிய பாணி என்ன? எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை நடந்தது என விசாரணை நடத்தி வீடியோவாக ஆதாரத்தை சேகரித்துக் கொண்டனர்.

இதனிடையே, கொள்ளை கும்பல் குறித்த மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. 3-வதாக கைது செய்யப்பட்ட நசீம் உசைனுடன், கொள்ளைக்கு பயன்படுத்திய ஜீப் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஹரியானாவில் இருந்து சாலை மார்க்கமாக ஜீப் மூலம் தமிழகம் வந்த கொள்ளையர்கள், சென்னையில் வேலையை முடித்து விட்டு, பின்பு புதுச்சேரி சென்றதும், அங்கிருந்து ஓசூர், பெங்களூரு வழியாக ஹரியானாவுக்கு தப்பிச் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பிச் செல்லும் வழியில் இருக்கும் எஸ்.பி.ஐ. டெபாசிட் மையங்களிலும் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளை கும்பலில் சிலர் சரக்கு லாரிகள் மூலமாகவும் தமிழகத்திற்குள் நுழைந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

ஹரியானாவில் 3-வதாக கைது செய்யப்பட்ட நசீம் உசைனை சென்னை கொண்டு வர திட்டமிட்டுள்ள போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தி ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு கொள்ளையன் வீரேந்தரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments