நம்பியவரின் "கழுத்தறுத்த" நண்பன்..! பணத்துக்காக அரங்கேறிய பாதகம்...

0 3442
நம்பியவரின் "கழுத்தறுத்த" நண்பன்..! பணத்துக்காக அரங்கேறிய பாதகம்...

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரித் தொழிலில் நட்டமடைந்த ஒருவர் தனது நண்பனையே கத்தியால் தாக்கி 50 லட்ச ரூபாயை பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த வடிவேலுவும் கலைச்செல்வனும் முந்திரித் தோப்பு வைத்திருக்கும் நண்பர்கள். இவர்களில் கலைச்செல்வனுக்கு தொழிலில் நட்டம் ஏற்படவே, அவ்வப்போது வடிவேலு உட்பட பலரிடம் பணம் கடனாகப் பெற்று வந்துள்ளார்.

இதனால் கடன் சுமை ஏகத்துக்கும் அதிகரித்து இருக்கிறது. வடிவேலு முந்திரி உற்பத்தியில் நல்ல லாபம் ஈட்டி வசதியாக இருப்பதைப் பார்த்த கலைச்செல்வன், அவரிடமிருந்து மொத்தமாகப் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி கடந்த சனிக்கிழமை வடிவேலுவை தனியாக முந்திரித் தோப்புக்கு அழைத்துச் சென்ற கலைச்செல்வன், திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து 50 லட்ச ரூபாய் வேண்டும் எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை எதிர்பார்க்காத வடிவேலு, பணம் தர முடியாது எனக் கூறியுள்ளார். இதனையடுத்து வடிவேலுவை அச்சமூட்டுவதற்காக அவரது கழுத்தில் லேசாக கத்தியால் கிழித்துள்ளார் கலைச்செல்வன்.

இதனால் பயந்துபோன வடிவேலு, குடும்பத்தினரை போனில் அழைத்து, 50 லட்ச ரூபாய் பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார். பணம் கைக்கு வந்ததும் கலைச்செல்வன் அங்கிருந்து தப்பிச் செல்லவே, வடிவேலுவை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் தனிப்படை அமைத்த போலீசார், கலைச்செல்வனை தீவிரமாகத் தேடி வந்தனர். திங்கட்கிழமை அதிகாலை காட்டுக்கூடலூர் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மினி லாரியில் வந்த கலைச்செல்வனை மடக்கிப் பிடித்தனர்.

அவரிடமிருந்து 43 லட்சத்து 68 ஆயிரத்து 350 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மீதத் தொகை எங்கே என அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments