முதல் 5 இலட்சம் பேருக்கு கட்டணமின்றிச் சுற்றுலா விசா..! நிதியமைச்சர் அறிவிப்பு

0 5025
முதல் 5 இலட்சம் பேருக்கு கட்டணமின்றிச் சுற்றுலா விசா..! நிதியமைச்சர் அறிவிப்பு

பன்னாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கிய பின், சுற்றுலாத் துறைக்குப் புத்துயிரூட்டும் வகையில் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் முதல் 5 இலட்சம் பேருக்குக் கட்டணமின்றி விசா வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்துக்குப் புத்துயிரூட்டும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வெளியிட்டனர்.

ஒருவருக்கு ஒருமுறை என்கிற வரம்பில், இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் முதல் 5 இலட்சம் பேருக்குக் கட்டணமின்றி விசா வழங்கப்படும் என்றும், இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையோ அல்லது 5 லட்சம் விசா வழங்கும் வரையோ பொருந்தும் என்றும் தெரிவித்தனர்.

சுற்றுலா முகமைகளுக்கு 10 இலட்ச ரூபாயும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஒரு இலட்ச ரூபாயும் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒருவருக்கு அதிகப்பட்சம் ஒன்றேகால் லட்ச ரூபாய் என்கிற அளவில் 25 இலட்சம் பேர் பயனடையும் வகையில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடன் உத்தரவாதத் திட்டம் செயல்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டனர்.

இந்தத் திட்டத்தில் வட்டி விகிதம் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்ததைவிட இரண்டு விழுக்காடு குறைவாக இருக்கும் எனத் தெரிவித்தனர்.

நவம்பர் வரை ஏழை மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் திட்டத்துக்காக இந்த ஆண்டு கூடுதலாக 93 ஆயிரத்து 869 கோடி ரூபாய் செலவிடப்படும் எனத் தெரிவித்தனர்.

மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான படுக்கை வசதி செய்யவும், குழந்தைநல மருத்துவத்துக்கும் 23 ஆயிரத்து 220 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

பட்ஜெட்டில் ஏற்கெனவே 85 ஆயிரத்து 413 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் உரமானியத்துக்குக் கூடுதலாக 14 ஆயிரத்து 775 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments