தந்தை பெற்ற பயிர் கடனுக்காக மகனின் வங்கி கணக்கில் உள்ள பணம் முடக்கம்: மருத்துவசெலவுக்கு பணம் இல்லாமல் உயிரிழந்த சோகம்..!

0 6176

பல்லடம் அருகே காலமான விவசாயி பெற்ற பயிர்கடனுக்காக மகனின் வங்கிக்கணக்கை பிளாக்செய்த வங்கி அதிகாரிகளின் கறார் நடவடிக்கையால், சேமிப்புக் கணக்கில் போதுமான அளவு பணமிருந்தும்  மருத்துவசெலவுக்கு அதை எடுத்து பயன்படுத்த முடியாமல் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளின் கெடுபிடியால் இரண்டு பெண்குழந்தைகள் தந்தையை இழந்து தாயாருடன் பரிதவிக்கும் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அடுத்த குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கனகராஜ். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவந்த கனகராஜுக்கும், காலமான அவரது தந்தை ரங்கசாமிக்கும் கேத்தனூரிலுள்ள பாரதஸ்டேட் வங்கி கிளையில் தனித் தனிவரவு செலவு வங்கிக்கணக்கு உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமான தந்தை ரங்கசாமி அந்த வங்கியில் 75,000 ரூபாய் பயிர்கடன் பெற்றிருந்த நிலையில் கடன் தொகையை முழுவதுமாக கட்டவில்லை என கூறப்படுகிறது. ரங்கசாமிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவரது கடனை முழுமையாக செலுத்தக்கூறி, கனகராஜை மட்டும் வங்கி நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். அவர் செலுத்தமறுத்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு அந்த கிளையில் கனகராஜ் வங்கி கணக்கில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை எடுக்க இயலாதபடி அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

சிறு நீரகப்பாதிப்புக்குள்ளான விவசாயி கனராஜ் மருத்துவ செலவுகளுக்காக கேட்டும் அவரது வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்து தந்தையின் கடனை அடைக்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட கனகராஜை , அவரது மனைவி கோவை கே.எம்.ஜி.எச் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கேட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து கனகராஜின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை விடுவிக்க அவரது சகோதரர் நாராயணசாமி, வங்கிக்கு சென்று மேலாளருடன் பேசியுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தியோ முடக்கிவைத்த கணக்கை விடுவிக்க மறுத்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்கு போதிய பணம் கிடைக்காத நிலையில் விவசாயி கனராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரது வங்கி கணக்கில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் இருந்தும் வங்கி அதிகாரிகள், முடக்கத்தை நீக்க மறுத்ததால், கனகராஜ் உயிரிழந்துவிட்டதாகவும், வங்கியின் அலட்சியத்தல் இரு மகள்களுடன் அவரது மனைவி கவிதா தவித்து வருவதாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் பல்லடம் சுற்றுவட்டார விவசாயிகள் திரண்டு சென்று கனராஜின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். விவசாய சங்க செயல்தலைவர் வெற்றி கூறுகையில், பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் விவசாயி ஒருவரின் வங்கி கணக்கை முடக்கி வைத்து அவரது உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது எனவும், அவரது தந்தை வாங்கிய பயிர்கடனை ரத்து செய்வதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயி கனகராஜின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்

இந்த குற்றச்சாட்டு குறித்து பாரதஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் சுந்தரமூத்தியிடம் கேட்ட போது, கனராஜின் வங்கி கணக்கை 2 மாதமாக முடக்கை வைத்திருந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்றதும் ஒரு வாரத்திற்கு முன்பு முடக்கத்தை விலக்கி கொண்டதாகவும் தெரிவித்தார். கனகராஜ் கணக்கில் இருந்து ஏ.டி.எம்மில் பணம் எடுக்க இயலவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தது குறித்து கேட்ட போது ஏ.டி.எம்மில் ஏதாவது பிரச்சனையாக இருக்கும் என்று மெத்தனமாக பதில் அளித்தார்

ஆயிரம் கோடிகள் கடன் பெற்றுவிட்டு கள்ளதனமாக நாட்டை விட்டு ஓடும் கோமான்களை கோட்டைவிடும் பொதுத்துறை வங்கிகள், விவசாயி ஒருவரின் பயிர்கடனுக்காக சம்பந்தமில்லா அவரது மகனின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை முடக்கி வைத்து ஒரு குடும்பத்தை நிற்கதியாக்கியதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்..!

அதே நேரத்தில் இந்த சோக சம்பவம் தொடர்பாக அரசு தனி குழு அமைத்து முறையான விசாரணை நடத்தி தவறிழைத்த வங்கி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு விவசாயி கனகராஜை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments