3 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் பாதிப்பு: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

0 6421

சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு  மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறையில் இருந்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், கொரோனா வகைகளில் டெல்டா பிளஸ் மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ்ஸின் தொற்றுத் திறன் அதிகம் என்பதோடு, நுரையீரல் செல்களில் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டது.

மேலும் Monoclonal antibody சிகிச்சையின் பலன்களை மட்டுப்படுத்தக்கூடியது என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்த வகை கொரோனா வைரசின் பாதிப்பு, தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, மிகவும் கவனத்துடனும், தீவிரமாகவும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதற்காக, 3 மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட பகுதிகளிலும், தடுப்பூசி போட முன்னுரிமை அளிப்பது, பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

இதேபோல, உருமாற்ற வகைகள் பரவுகிறதா என்பதைக் கண்டறிய, கொரோனா உறுதியாகும் நபர்களது மாதிரிகளை போதிய அளவில் சம்மந்தப்பட்ட ஆய்வகங்களுக்கு அனுப்புமாறும் தமிழக தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுரையில் டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 34 வயது ஆண், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியே உயிரிழந்து விட்டார். மதுரையில் இருந்து மொத்தம் 20 மாதிரிகள் அனுப்பப்பட்டதில் அந்த நபருக்கு மட்டுமே கொரோனா பிளஸ் பாதிப்பு இருந்துள்ளது. எனவே, அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவரது தொடர்பில் இருந்த நபர்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது.

இதனிடையே, டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் பரிசோதனை மையம், சென்னையில் 25 நாட்களுக்குள் பரிசோதனை தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் மூன்றாம் அலை ஏற்படலாம் எனக் கூறப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளது என்றார்.

டெல்டா பிளஸ் தொற்று பாதித்தவர்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டதால், சம்மந்தப்பட்டு பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments