போலீசில் இருந்து தப்பிக்க சாலையில் போலி வக்கில் அட்டகாசம்..! வாகனங்களை சேதப்படுத்தி ரகளை

0 3169
போலீசில் இருந்து தப்பிக்க சாலையில் போலி வக்கில் அட்டகாசம்..! வாகனங்களை சேதப்படுத்தி ரகளை

தேனியில் கோஷ்டி மோதல் வழக்கில் சிக்கிய போலி வழக்கறிஞர் ஒருவர் போலீசிடம் இருந்து தப்பிக்க, போலீசார் தாக்கியதாக கூறி குடும்பத்துடன் சாலையில் வாகனங்களை மறித்து, தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் தாக்கி, போதை வியாபாரி உயிரிழந்ததால், எஸ்.ஐ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது..!

இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு காவல்துறையினரை ஆத்திரம் மூட்டி அடிக்க வைப்பதற்காக, வம்படியாக சென்று சண்டை போடுவதை சில போதை ஆசாமிகளும், குற்றவழக்கில் தொடர்புடையவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் தங்களிடம் வம்பிழுப்போரை திருப்பித்தாக்காமல், லத்தியின்றி, எதிர் தாக்குதல் இன்றி, சமாதானப்படுத்தும் ஜென் மன நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தேனியில் கோஷ்டி மோதல் வழக்கில் தொடர்புடைய ஜெயபிரபு என்பவர் காயமடைந்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் மீது வழக்கு நிலுவையில் இருந்ததால் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்ல இருந்த அவரை கைது செய்ய போலீசார் சென்றனர். போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக தன்னை தானே தாக்கி ரத்தம் வர வைத்துக் கொண்டு போலீசார் தாக்கிவிட்டதாக கூறி நாடகமாடினார்.

ஆனால் போலீசார் அவரை கைது செய்து மருத்துவமனைக்கு வெளியே அழைத்து வந்த போது, தான் செய்வதை யாரும் படம் பிடிக்கவில்லை என்ற நினைப்பில் அங்கு நின்ற போலீஸ் வாகனத்தில் தலையை மோதி போலீசாரை பயமுறுத்தினார்

அதோடில்லாமல் நடு ரோட்டில் வாகனங்களை மறித்து அட்டகாசம் செய்த ஜெய்பிரபு, மீடியாக்கள் வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி சில வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தி தன்னை காயப்படுத்திக் கொண்டார்.

ஆனால் அவருடன் வந்த அவரது மனைவியோ கையில் செல்போனால் படம் பிடித்த படி போலீசார் தங்களை தாக்கிவிட்டதாக கூறி சாலையில் அமர்ந்து ரகளை செய்தார்

எந்த ஒரு போலீசாரின் கையிலும் லத்தி இல்லாமல் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச்செல்ல பொறுமையோடு அவருடனேயே காத்திருந்தனர். ஆனால் ஜெயபிரபுவோ, மதம்பிடித்த யானை போல சாலையில் செல்லும் வாகனங்களை எல்லாம் தாக்க தொடங்கினார்

நிலைமை விபரீதமாவதை உணர்ந்து அங்கு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிந்தனர். அவரை சுற்றிவளைத்து குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று அவரது உடலில் இருந்த காயத்திற்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக கூடுதலாக ஒரு வழக்கு பதிவு செய்து ஜெயபிரபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் காவல் துறையினர். ஆரம்பத்திலேயே போலீசுடன் சென்றிருந்தால் அந்த ஒரு வழக்கோடு போயிருக்கும். குடும்பத்துடன் போலீசார் தாக்கியதாக நாடகமாடி சாலையில் ரகளை செய்ததால் போனஸாக ஒரு வழக்கில் சிக்கி கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் போலி வழக்கறிஞர் ஜெயபிரபு..! என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments