இட்லி கடை காதல்..! காதலியை கொன்ற நைட் டியூட்டி எஸ்.ஐ; கொரோனா நாடகம் அம்பலம்

0 7297
இட்லி கடை காதல்..! காதலியை கொன்ற நைட் டியூட்டி எஸ்.ஐ; கொரோனா நாடகம் அம்பலம்

உதகை பேருந்து நிலையத்தில் இட்லி கடை நடத்தி வந்த பெண்ணை கொலை செய்து காரில் கடத்தி கொரோனாவால் இறந்ததாக நாடமாடிய காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார். மாமூலில் மலர்ந்த காதல் கொலையில் முடிந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

நீலகிரி மாவட்டம், உதகை கியூ பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் முஸ்தபா. இவருக்கும் பேருந்து நிலையத்தில் இரவு நேர இட்லி கடை நடத்திவந்த மாகி என்ற பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நைட் டியூட்டி என்று மாமூலுக்காக போக்குவரத்துமாக இருந்த எஸ்.ஐ முஸ்தபா, மாகிக்கு இடையே மலர்ந்த ரகசிய காதலால் இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்த ரகசிய காதல் ஜோடிகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில், நீண்ட காலமாக தனி வீட்டில் தங்கி செல்லும் தகவல் அரசல் புரசலாக தெரியவந்தாலும் மாகியின் உறவினர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில், சம்பவத்தன்று மாகியின் உறவினர்களை போனில் அழைத்த எஸ்.ஐ. முஸ்தபா, தன்னுடன் வீட்டில் தங்கி இருந்த மாகி கொரோனா பாதிப்புக்குள்ளாகி இறந்து விட்டதாகவும், தனது செல்வாக்கை பயன்படுத்தி அவரது சடலத்தை மருத்துவமனையில் இருந்து பெற்று வந்து விட்டதாகவும், போலீசுக்கு தெரிந்தால் சடலத்தை வாங்கிச்சென்று விடுவார்கள் எனவே நாமே அடக்கம் செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.

மாகியில் உடல் முழுவதும் துணியால் சுற்றி தனது ஆல்டோ காரின் முன்பக்க இருக்கை ஒன்றை கழற்றி அதில் வைத்து சடலத்தை வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார். உறவினர்கள் சடலத்தை பார்ப்பதற்கு சுற்றி இருந்த துணியை அகற்ற முயன்றுள்ளனர். அப்போது துணியை அவிழ்த்தால் கொரோனா தொற்றிக் கொள்ளும் என்று பயமுருத்தியுள்ளார். உறவினர்கள் அதனை மீறி மாகியின் சடலத்தை சுற்றிய துணியை அவிழ்த்துள்ளனர். அதற்குள்ளாக வீட்டில் இருந்து முஸ்தபா தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.

மாகியின் உடலில் காயங்கள் காணப்பட்டதால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். தப்பிச்சென்ற எஸ்.ஐ முஸ்தபாவை பிடித்து விசாரித்த போது மாகி மரணத்தில் இருந்த மர்மம் விலகியது. ஊரடங்கு காரணமாக மாகியை பிரிந்திருந்த எஸ்.ஐ முஸ்தபா, சம்பவத்தன்று தான் கொடுத்து வைத்திருந்த பணம் தொடர்பாக கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாகியை சமாதானம் செய்யும் பொருட்டு, தனது காரில் ஏற்றி அழைத்து சென்று பல்வேறு பொருட்கள் வாங்கிக் கொடுத்து தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னரும் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகளப்பாகியுள்ளது. இதில் முஸ்தபா தாக்கியதில் மாகி உயிரிழந்துள்ளார். இதனை மறைப்பதற்காக அவர் கொரோனாவால் இறந்ததாக நாடகமாடியது அம்பலமானது.

கொலை சம்பவம் என்று தெரியவந்த பின்னரும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்யாமல் காலதாமதப்படுத்துவதாக கூறிய அவரது உறவினர்கள் மாகியின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எஸ்.ஐ முஸ்தபா மீது கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தவறான உடல் சார்ந்த தேடலால் தடம் மாறி பயணித்தால் இறுதியில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments