ஆற்றில் மூழ்கிய சிறுமி.. உயிரை பணயம் வைத்த 3 சிறுவர்கள்..! 4 பேர் பரிதாப பலி

0 3622

ந்திர மாநிலம் கடப்பா அருகே ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி சிறுமி ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அவரை எப்படியேனும் காப்பாற்றி விட வேண்டும் என்று தங்கள் உயிரை பணயம் வைத்த மேலும் 3 சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடப்பாவைச் சேர்ந்த ஃபர்வேஸ் கான் என்பவரும் அவரது உறவினர் ஒருவரும் தங்களது குடும்பத்தினரோடு வியாழக்கிழமையன்று 2 கார்களில் சுற்றுலா புறப்பட்டுள்ளனர். வள்ளூரு மண்டலம் புஷ்பகிரி கோவிலுக்கு அருகிலுள்ள பென்னா ஆற்றின் கரைக்குச் சென்றவர்கள், கரையில் அமர்ந்து பொழுதைக் கழித்துள்ளனர்.

அப்போது இரு குடும்பங்களையும் சேர்ந்த சிறுமி பதான் சவேரியா, சிறுவர்கள் பதான் அப்துல் ரஷீத், பதான் அனுஸ்கான், பதான் அப்துல் வாகீத் கான் ஆகிய 4 பேர் மட்டும் நதியில் இறங்கி குளிக்க முயன்றுள்ளனர். அவர்களில் சிறுமி பதான் சவேரியா எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடியுள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற சக சிறுவர்களும் ஆழமான பகுதியில் சிக்கி அடுத்தடுத்து 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிறுவர்களின் கூச்சல் சப்தம் கேட்டு பெரியவர்கள் வருவதற்குள் 4 பேரும் நதியின் ஓட்டத்தில் மாயமாகியுள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இரவு முழுவதும் தேடி 3 பேரின் உடல்களை மீட்டனர். பதான் அப்துல் வாஹித் கான் உடல் மட்டும் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.

கடப்பா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வந்தது. இதில் ஆறுகள், ஓடைகள், ஏரிகள் என நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பிக் காணப்படுகின்றன. சிறுவர்களுடன் இதுபோன்ற பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என ஆந்திர போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments