ரவுடி - பொண்ணு பிளாக் மெயில் போராட்டம்... ஏறாத இடமேயில்லையாம்..!

0 4674

தென்காசியில் இருந்து கேரளாவுக்கு அரிசி கடத்தி போலீசில் சிக்கிக் கொண்ட தந்தைக்கு ஆதரவாக போராட்டம் செய்வதாக கூறி செல்போன் டவர், தண்ணீர் தொட்டி வரிசையில் தனது வீட்டுக்கூறையின் மீது ஏறி அமர்ந்து கொண்டு அடம்பிடித்த இளம் பெண்ணை, ஊர் மக்கள் எச்சரித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

எச்சரித்த மக்களை சாதியின் பெயரால் ஆபாசமாக வசைபாடி வீதியில்  நின்று ரகளையில் ஈடுபட்ட  அரிசி கடத்தல் ஆசாமியின் அட்டகாசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

முதலில் செல்போன் டவர்... அடுத்த நாள் செங்கோட்டை அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி..அதன் தொடர்ச்சியாக வீட்டுக்கூரை..!

இப்படி உயரமான இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மறுத்து தற்கொலை செய்யப்போவதாக தினம் தினம் போலீசுக்கு எதிராக பிளாக்மெயில் நாடகம் நடத்திவரும் இவர் வேறுயாருமல்ல காவல்துறையினரின் ரவுடி பட்டியலில் உள்ள பிரான்சிஸ் மகள் அபிதா..!

தாட்கோ நகரில் வசித்து வரும் ரவுடி பிரான்ஸிஸ், சம்பவத்தன்று அரிசி மூட்டையுடன் புளியரை சோதனை சாவடியில் போலீசிடம் சிக்கிய நிலையில், போலீசார் தன்னை தாக்கியதாக கூறி செங்கோட்டை மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டார்.

அவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் நாள் செல்போன் டவரிலும், இரண்டாம் நாள் செங்கோட்டை அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டியிலும் ஏறி அமர்ந்து கொண்டு அவரது மகள் அபிதா பிளாக் மெயில் நாடகம் ஆடினார்.

பெண் என்பதாலும், அவர் ஏதும் விபரீத முடிவு எடுத்து விடக்கூடது என்ற நல்ல எண்ணத்திலும், அவரது புகாரை ஏற்று உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனை ஏற்காமல் சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய கோரிக்கையுடன் பிரான்ஸிஸ் மற்றும் அவரது இரு மகள்களும் மீண்டும் போராட்டம் என்ற பெயரில் அடுத்த பிளாக்மெயில் நாடகத்தை அரங்கேற்றினர். வழக்கம் போல அபிதா வீட்டுக் கூரையின் மீது ஏறி அமர்ந்து கொள்ள, மற்றொரு மகள் தரையில் அமர்ந்து கத்தி கூச்சலிட்டார்.

இதனை கண்டு எரிச்சலடைந்த உள்ளூர் மக்கள், அரிசி கடத்தி சிக்கியதோடு, போலீசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வழக்கு போட்ட பின்னரும் ஏன் இப்படி ஊர் பெயரை அசிங்கப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதால் ஊர் மக்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

கடுமையான காயம் அடைந்தவர் போல இரு தினங்களாக நடித்து வந்த பிராண்ஸிசின் சுயரூபம் அப்போது தான் வெளிப்பட்டது. தன்னுடைய சாதி பெயரை பெருமையாக கூறிக்கொண்ட பிரான்சிஸ், தன் மீது அரிசி கடத்தல் வழக்கு போட்டால் விட்டு விடுவேனா? போலீஸ் பிடித்ததும், சிபாரிசுக்கு செல்போனில் அழைத்த போது ஏன் ஊர்காரன் எவனும் வரவில்லை? எனக் கேட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டியதோடு கடும் ரகளையிலும் ஈடுபட்டார்.

பிரான்ஸிஸ் மற்றும் அவரது மகள்கள் செய்த அலப்பறையால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் ஒன்று திரண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஊரில் மறியல் போராட்டம் நடத்தினர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஊர் மக்களை சமாதானப்படுத்தினர்.

போலீசுக்கும், அந்த ஊர் பொதுமக்களுக்கும் பெரும் தலைவலியாக மாறி இருக்கும் பிரான்ஸிஸ் மீது ஏற்கனவே நாட்டு வெடிகுண்டு வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் இருப்பதாகவும், உயரமான இடங்களில் எல்லாம் ஏறி ஏறி போராட்டம் நடத்தும் அபிதா மீது மாமனாரை கத்தியால் குத்திய வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

காவல் நிலைய ரவுடி பட்டியலில் பிரான்சிஸ் பெயர் உள்ளது. மேலும், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது கைவிரல்களை பறிகொடுத்த பிரான்சிஸ் தன்னை மாற்றுத்திறனாளி என்று கூறிக் கொண்டு தன் மகளை வைத்து இந்த போலியான பிளாக் மெயில் போராட்டங்களை நடத்தி அனுதாபம் தேடிக் கொள்ள முயல்வதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது போன்ற பிளாக் மெயில் ரவுடிகளை காவல்துறையினரும், தமிழ்நாடு அரசும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அந்த ஊர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments